உச்சகட்ட களிப்பை
கிள்ளி வீசுவதற்கும்
உள்ளம் உணரும் வலிகளை
உள்ளுவதற்கும் ஊடகமாய்
அமையும் வரிகள் அற்புதம்

தனிமை எனும் வெறுமை நீக்கி 
பிரிவின் கொடுமைகள் மறக்கடிக்க
வாசிப்பு எனும் தண்மையாயுள்ள
வரிகளின் சேர்க்கை அற்புதம்

அடிமைத்தனத்தை விலக்கி
உரிமைகளை உரத்துக் கூறவும்
உண்மைகளை புடம் போடவும்
மனிதப்பதவி பாரா கருவியென
வரிகளின் கோர்வை அற்புதம்

வாய்களால் வெளிப்படுத்தா உணர்வுகளையும்
வார்த்தையால் மொழிய இயலா
இயற்கையின் வர்ணனைகளையும்
வரிகளால் வடிப்பதும் அற்புதம்

தோள் தட்டிக்கூறும் வார்த்தைக்காய் ஏங்காது
தாள் கட்டுக்களில் இயம்பும் ஊக்குவிப்பில்
காலூன்றி நிற்க உளத்துணிவு வழங்கும் வரிகளும் அற்புதம்

அட்சரங்களில் வெடிக்கும் முயற்சி ஊக்கிகளால் 
தன்னம்பிக்கை மலர்வதும்
சொற்சுரங்கங்களில் தெரியவைக்கும் நேயங்களின் காயசாயல்களினால்
விழிநீர் சொட்டுவதும்
வரிகளின் அற்புதம்

மானிடப்படைப்பின் வரிகளே 
இத்தனை அற்புதம் எனின்
படைப்பாளனின் இறைவரிகள்
எத்தனை  அற்புதம்???

Fahmidha Hasan
Pulmoddai