சிறுவயதிலிருந்து நான் அடிக்கடி பலரது வாயால் சொல்லக் கேட்ட வாசகமொன்று தான், "மருத்துவரிடமும், வழக்கறிஞரிடம் ஒருபோதும் பொய் சொல்லக் கூடாது, அவ்வாறு கூறினால் உனக்குத்தான் எதிர்வினை கிடைக்கும்" என்பதாக. இதனைச் சிறு வயதிலேயே, அதிலும் பலமுறை கேட்டதால் என்னவோ பசுமரத்தாணியாய் ஆழ் மனதில் பதிந்துவிட்டது. அடிப்படையிலேயே பொய்களை தவிர்த்து வாழ வேண்டும் என்று பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் போதிக்கப்பட்டு இருந்தாலும் கூட மேற்சொன்ன வாசம் பலரிடம் அவ்வப்போது கேட்பதுண்டு. இதனால் மருத்துவர்கள், வழக்கறிஞர்களிடம் ஒருவிதமான மதிப்பச்சம் தோன்றி அது எப்போதும் மனதை ஆட்சி செய்து கொண்டேயிருக்கும்.

 சிறு வயது முதல் இருந்த அந்த மதிப்பு என்ற பண்பு இன்றைய காலத்தில் முகம் சுளிக்க வைக்கின்றது. சமூகம் வேண்டி நிற்கும் மருத்துவம் என்ற கடமையை இன்று ஏனோ ஒரு கேள்விக் குறியாய் பார்க்க வைக்கின்ற பல சம்பவங்கள் தினம் நடந்தேறுகின்றன.

 "மருத்துவர்களிடம் பொய் சொல்லக்கூடாது, ஆனால் மருத்துவர்கள் பொய் பேசினால்?" இந்தக் கேள்விதான் இன்று பலரிடம் இடியாய் குடி கொண்டுள்ள மிகப்பெரிய வினா.

கொரோனா நோயினால் பலர் அநீதி இழைக்கப்படுவதாக ஒரு சாதாரண பாமர மனிதனுக்கே தெளிவாக விளங்குகின்ற காலகட்டத்தில் கூட எந்தவொன்றையும் செய்ய முடியா அருகதையற்றவர்களாக கை கட்டிப் பார்க்கும் அவலநிலை தோன்றிற்று. ஆனால் நானும் இலங்கை நாட்டுப் பிரஜை.

 ஏனைய நாடுகளில் கொரோனாவினால் இறக்க, இந்நாட்டில் இறந்து பின் கொரோனா தொற்றிக் கொள்வதில் உள்ள மாயம் என்னவோ!

(இவ்வாறு இந்த ஆக்கத்தை எழுதிக் கொண்டிருந்ததை இடையில் நிறுத்திவிட்டு, முகப்புத்தகத்தை அலசிக்கொண்டிருக்கும்போது ஆக்கத்துக்கு பொருத்தமான ஒரு கதை என் கண்ணுக்குப் புலப்படவே உடனே வாசித்து அதை எடுத்து விட்டேன்.)

 _கதை இதுதான்.._ 

 ஒருமுறை ஒருவன் தற்கொலைக்கு முயற்சித்தான். கையில் ஒரு கயிறு, ஒரு விஷக் கூப்பி, ஒரு லீட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு துப்பாக்கி சகிதம் உயர்ந்த மலை ஒன்றின் உச்சிக்கு ஏறினான். கயிற்றை ஒரு மரத்தில் கட்டி மறுபுறத்தை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டான். விஷக் குப்பியை திறந்து ஒரு விழுங்காக எல்லாம் குடித்தான். பெட்ரோலால் குளித்து தீ மூட்டிக்கொண்டான். அத்தோடு மலை உச்சியிலிருந்து கீழே குதித்தான். குதிக்கும்போது தன் கையிலிருந்த துப்பாக்கியால் தனது தலையை ஒரு வேட்டு வைத்தான். 

இவ்வளவு பிரயத்தனங்கள் செய்ததன் நோக்கம்; அவன் இனிமேல் தப்பியாவது, தவறியாவது உயிர் பிழைக்கக் கூடாது, அதற்காக எல்லா வாயில்களையும் அடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

 ஆனால் அவன் வைத்த வேட்டு தப்பி கயிற்றில் பட, கயிறு அறுந்து அவன் கீழே விழுந்தான். தண்ணீர் தீயை அணைத்து அருகிலிருந்த மீனவன் ஒருவன் அவனை காப்பாற்றி கரை சேர்த்தான். தொகையான தண்ணீர் வயிற்றில் சென்றதால் வாந்தி எடுத்தான். கையோடு சேர்த்து குடித்து விஷத்தையும் கக்கினான். 

 மேலதிக சிகிச்சைக்காக உடனே அவன் கொழும்பில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். மறுநாள் அவன் கொரோனாவினால் இறந்துவிட்டதாகவும் அவனது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

மனிதன் நினைத்த நேரத்தில் மரணிக்க முடியாது, இறைவன் விதித்த நேரத்தில் தான் மரணிக்க முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.

மேற்சொன்ன கதை நகைச்சுவை கலந்ததாக இருப்பினும் அக் கதையை நடைமுறைப்படுத்துவதாகவே பல்வேறு சம்பவங்கள் நடந்தேறி எம்மை கண்கலங்க வைக்கின்றன. எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவோம். நாங்கள் நிராசை அடைய எந்த தேவையும் இல்லை. ஏனெனில் எம்மோடு இறைவன் இருக்கின்றான். பிரார்த்தனையே எமதாயுதம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

மற்றுமோர் அறிவிப்பில்,

“மூவரின் துஆக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளரின் துஆ; _அநியாயம் இழைக்கப்பட்டவரின் துஆ_ ” 

(ஆதாரம்: திர்மிதி)

மற்றுமோர் அறிவிப்பில்,

முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது “ _அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! எனென்றால் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது_ ” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

ஆக, அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை எவ்வித திரையுமின்றி இறைவன் ஏற்றுக் கொள்கின்றான். எமக்கு அவ்வாறான சந்தரப்பங்களை பலர் ஏற்படுத்தித் தருகிறார்கள். நிராசையடையாமல் பிரார்த்திப்போம்.

SaJiDh wAhAb (Naleemi)