முன்னொரு காலத்திலே ஒரு பிரயாணக் கூட்டம் நடைபாணியாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிராக ஒரு மலை தென்படுகிறது. அந்த மலையைக் கடக்க வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதுவொரு குகை வழிப்பாதை மாத்திரமே. எனவே பிரயாணக் கூட்டத்தின் தலைவன் பிரயாணிகளுக்கு அந்தக் குகை வழியினூடாகப் பிரயாணம் செய்வதற்கு கட்டளை பிறப்பிக்கின்றான். எனவே அனைத்துப் பிரயாணிகளும் அவ்வழியினூடாகப் பயணத்தை தொடர்கின்றார்கள். அக்குகையோ கும்மிருட்டாகவும் இருள் சூழ்ந்ததாகவும் காணப்படுகிறது. குகைப் பாதையோ கரடுமுரடானதாக, கற்கள் நிறைந்ததாக, நடப்பதற்கு சிரமமானதாக காணப்படுகின்றது.

எனவே பிரயாணக் கூட்டத்தின் தலைவன் அந்த பிரயாணிகளுக்கு  "பிரயாணிகளே! உங்களுக்கு முடியுமானவரை உங்களிடமுள்ள பைகளில் கற்களை பொறுக்கிப் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் எமக்குப் பின்னால் வருகின்ற பிரயாணிகளுக்கு இப்பாதை பயணம் செய்வதற்கு இலகுவாக இருக்கும், நாங்கள் மீண்டும் இவ்வழியாக வரும்போது கடினத்தை உணரக் கூடாது"  என்று கூறுகிறான். எனவே ஒரு சிலர் ஒரு மூடைக் கற்களையும் இன்னும் சிலர் அரை மூடைக் கற்களையும் இன்னும் சிலர் சிறு தொகைக் கற்களுமாக தங்களது சக்திக்கேற்ற வகையில், தமது ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் கற்களை பொறுக்கிப் போட்டுக்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ எவ்வித கற்களும் பொறுக்காமல் அவ்வாறே பிரயாணத்தை தொடர்கிறார்கள்.

அனைவரும் குகையின் எதிர் வாசலை அடையவே வெளிச்சம் தென்படுகிறது. அப்போதுதான் ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள கற்களை பார்க்கின்றார்கள். அவை மிகவும் பெறுமதியான வைரக் கற்களாக காணப்படுகின்றன. அப்போது ஒரு மூடைக் கற்களை பொறுக்கியவர்கள் 'தாம் இன்னும் அதிகமான கற்களை பொறுக்கிப் போட்டுக் கொண்டிருக்கக்கூடாதா!' என்று ஆதங்கப்படுகின்றார்கள். அரை மூடைக் கற்களை பொறுக்கியவர்கள் 'தாம் இன்னும் அதிகமான கற்களை பொறுக்கிப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாதா!' என்று ஆதங்கப்படுகிறார்கள். அதேபோன்று சிறிதளவு கற்களை பொறுக்கிப் போட்டவர்கள் 'தாம் இன்னும் இதனை விட அதிகமாக கற்களை பொறுக்கி போட்டுக் கொண்டிருக்கக் கூடாதா!' என்று ஆதங்கப்பட, எந்தவித கற்களும் எடுக்காமல் பிரயாணத்தைத் தொடர்ந்தவர்கள் கைசேதப்படுகிறார்கள்.

 இது வெறுமனே ஒரு கதையாக இருந்தாலும் சிந்திப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.   பிறந்தது முதல் இறக்கும் வரையான இவ்வுலக வாழ்க்கையும் இந்தக் குகையினூடாகப் பிரயாணம் செய்வதற்கு ஒப்பான ஒரு வாழ்க்கையாகும். நாம் இருள் சூழ்ந்த இந்த குகை வழிப்பாதையைக் கடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது இருக்கின்றோம். பல கற்கள் சிதறிக்கிடக்கின்றன. அதனைப் பொறுக்கிக் கொள்வதற்கான அனைத்து விதமான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பல கற்களை பொறுக்கிக் கொள்ளத்தான் ஆட்கள் இல்லை. உங்களது இவ்வுலக வாழ்வில் பொக்கிஷங்களாக சேகரித்துக் கொள்ள முடியுமான இரண்டு வார்த்தைகளை நினைவுபடுத்துகிறேன். மறவாமல் பொறுக்கி நெஞ்சினிலே ஆழப் பதித்திடுங்கள்.

நபியவர்களின் அழகிய பொன்மொழி இது: 

"كلمتان خفيفتان على اللسان..."
நாவிற்கு மிக இலகுவான இரண்டு வார்த்தைகள்
 "ثقيلتان في الميزان..." 
மீஸான் தராசிலே மிகவும் பாரமான இரண்டு வார்த்தைகள்
"حبيبتان إلى الرحمن..." 
மிக இரக்கமுள்ள அருளாளனுக்கு மிகவும் பிடித்தமான இரண்டு வார்த்தைகள்
அவைதான்;
*"سبحان الله وبحمده سبحان الله العظيم"*
(புஹாரி,முஸ்லிம்)

மற்றுமோர் அறிவிப்பிலே,

"قال الرسول ﷺ: من قال سبحان والله وبحمد مائة مرة، غفرت ذنوبه وإن كانت مثل زبد البحر"
"யார் ஒரு நாளைக்கு நூறு தடவை سبحان والله وبحمد என்று கூறுகிறாரோ, கடல் நுரையளவு பாவங்கள் இருந்தாலும் (சிறிய பாவங்கள்) அவை மன்னிக்கப்படும்."

மற்றுமோர் அறிவிப்பிலே,

"من قال حين يصبح وحين يمسي، سبحان الله وبحمده مائة مرة، غفرت خطاياه وإن كانت مثل زبد البحر"
"யார் காலையை அடைந்தாலும், மாலையை அடைந்தாலும், سبحان الله وبحمده என்ற நாமத்தை நூறு விடுத்தம் கூறுகிறாரோ , கடல் நுரையளவு பாவங்கள் இருந்தாலும் (சிறிய பாவங்கள்) அவை மன்னிக்கப்படும்."  

மற்றுமோர் அறிவிப்பு;

"யார் காலையை அடைந்தாலும், மாலையை அடைந்தாலும்,
سبحان الله وبحمده
 என்று நூறு தடவை கூறுகிறாரோ மறுமை நாளில், மஹ்ஷர் மைதானத்தில் மிகவும் சிறந்த மனிதனாக, மிகவும் உன்னத மனிதனாக அவர் காணப்படுவார். அவரை விடவும் சிறந்த ஒரு மனிதராக ஒருவர் காணப்பட வேண்டுமாயின் அவரை விட அதிகமாக سبحان الله وبحمده என்று கூறியிருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
(முஸ்லிம்)

மற்றுமோர் அறிவிப்பிலே,

 "النبي ﷺ قَالَ: منْ قَالَ: سُبْحانَ اللَّهِ وبحَمدِهِ، غُرِستْ لهُ نَخْلَةٌ في الجَنَّةِ. "
"யார் سُبْحانَ اللَّهِ وبحَمدِهِ
என்று கூறுகிறாரோ அவருக்கு சுவனத்திலே ஒரு பேரிச்சமரம் நடப்படுகிறது"
(திர்மிதி)

எனவே பாசமிகு தோழமைகளே!

நாவிற்கு மிகவும் இலகுவான, இறைவனுக்கு மிகவும் பிடித்தமான இந்த  இரண்டு வார்த்தைகளாக இருப்பினும், ஒரு நாளில் நூறு தடவை எவ்வாறு மொழிவது என்று சிந்திக்கிறீர்களா?

ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்குப் பின்னாலும் இந்த நாமத்தை மொழியுங்கள்.
வீதியில் நடக்கும்போது இந்த நாமத்தை மொழியுங்கள்.
 உறங்கச் சென்று உறக்கம் வரும் வரை இந்த நாமத்தை மொழியுங்கள்.
ஓய்வாக இருக்கும் வேளையில் இந்த நாமத்தை மொழியுங்கள்.

ஒரு நாளைக்கு நூறு விடுத்தம் அல்ல, ஆயிரம் தடவை கூறலாம். இருந்த இடத்திலிருந்தே பல கோடி நன்மைகளுக்கு சொந்தக்காரராகலாம். சுவனத்துப் பெருந்தோட்டங்களுக்கு உரிமையாளராகலாம். கற்களைப் பொறுக்கிப் போட்டுக் கொள்ளுங்கள். இவ்வாழ்க்கை ஒரு வழிப் பாதை மாத்திரமே. திரும்பி வர முடியாது.

 _இக்கணமே ஆரம்பிப்போம். மாற்றம் எம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்._ 

SaJiDh wAhAb