இனிமேல் தேவைப்படாது என அப்புறப்படுத்தப்படுபவைகளுள் பல வருடங்களுக்கு முன்னர் படித்து பரீட்சை எழுதி முடித்த பாடசாலைக் கொப்பிகளை மட்டும் நிராகரிக்க ஏனோ மனம் முன்வருவதில்லை...
இதற்குப்பின் இவை தேவைப்படாது என்ற எண்ணம் மனதில் ஆழமாக உரத்து சொன்னாலும் ஏதோ ஒரு நினைவுக்காய் இருக்கட்டுமே என பத்திரப்படுத்தப்பட்டவை ஏராளம்..
பல வருடங்களுக்கு முன்னர் எம்மால் அவஸ்தைப்படுத்தப்பட்ட அந்தப் பக்கங்களை புரட்டுகையில் பழைய நினைவுகளுடன் சேர்ந்து சிறு புன்னகையும் அனுமதியின்றியே எம் இதழ்களோடு இணைந்துகொள்ளும்.
சீராகச் செல்லும் ரயில் வண்டியில் சிறு மாற்றம் ஏற்பட்டது போல்
முதல் பக்கத்தில் நேர்த்தியாய் பார்த்து பார்த்து எழுதப்படும் கையெழுத்துக்கள் அடுத்தடுத்த பக்கங்களில் கிறுக்கல்களாய் மாறியிருக்க,
நாம் எழுதியது நமக்கே புரியாமல் நண்பியிடம் கேட்ட நினைவுகள் மனதைத்தொட, படித்துக்கொண்டிருக்கும் போது வரும் தூக்கத்தை தடுக்க கொப்பியின் கடைசித்தாளை கீறிக்கிழிக்கும் பேனா வரிகளின் சங்கமும் மறக்க முடியாத சில நினைவுகளே..
இறுதிப்பக்கங்களில் நேரம், காலம், இடம் போட்டு வட்டமிட்டு
எழுத்தில் பதிந்திருக்கும் வரிகளும் அந்த பக்கங்களை மீண்டும் புரட்டு கையில் சம்மதமின்றி எம்மோடு சங்கமிக்கும் நினைவுகளும் விடை கொடுக்க விருப்பமில்லா சுகங்களாகும்...
அந்த நினைவுகளுடன் அதனை நினைவு படுத்தும் பக்கங்களையும் என்னுடனேயே வைத்துக்கொள்கிறேன் நான்..
கடந்த காலங்களின் நினைவுகளிலும் ஓர் அழியா சுகம் உள்ளது அல்லவா??
ஷப்ரா இல்முத்தீன்..
அட்டாளைச்சேனை...
0 Comments