கதைகளைப் படிப்பதில் எல்லோருக்கும் பொதுவாக தனி ஆர்வமுண்டுதான். இருப்பினும் அந்தக் கதைகளிலிருந்து எந்தளவு தூரம் படிப்பினைகள் பெறுகின்றோம் என்பதுதான் கேள்விக்குறி. பல நாட்களாகவே எழுத வேண்டும் என்ற ஆழ்மனது எண்ணத்தை இன்றுதான் உயிர் கொடுக்க முடிந்தது. அது ஒரு சுவாரஷ்யமான சம்பவம். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சம்பவம், ஆச்சரியமான சம்பவம், உளத்தூய்மையைப் பறைசாற்றும் சம்பவம், ஒரு மனிதனின் சம்பவம், உண்மைச் சம்பவம்.

இடம் : ரோமபுரி போர்க்களம்.

ரோமர்களுக்கு எதிராக  மஸ்லமா இப்னு அப்துல் மலிக் என்ற தளபதியின் தலைமையில் முஸ்லிம்கள் போராடும் நிலையில் போர்க்களம் தீவிரமடைகிறது. ரோமர்களின் கோட்டையை முஸ்லிம்கள் சூழ்ந்தபோதும் அதனை தகர்ப்பதோ, அவர்களுடன் எளிதில் போராடுவதோ மிகவும் சிரமமாக இருந்தது. கோட்டையின் சுவர்கள் உயரமாகவும், பலம்மிக்கதாகவும் இருந்ததுடன் வாயில்கள் அனைத்தும் சாத்தப்பட்டிருந்ததால் எளிதில் நுழையவும் முடியவில்லை. இவ்வாறான அமைப்பு ரோமர்களுக்குச் சார்பாகவும் முஸ்லிம்களுக்குச் சிரமமாகவும் இருந்ததால் முஸ்லிம்களின் பக்கம் சோர்வும், களைப்பும் மெல்ல படர ஆரம்பமானது.
இருள் சூழ்ந்து கொள்ள போராடிய களிப்பிலே கூடாரங்களில் தஞ்சம் புகுர்கிறார்கள் முஸ்லிம் வீரர்கள். 

நடுநிசி நேரம்.. நிலா தன் கடமையை செவ்வனே எவ்வித சஞ்சலமுமின்றி செய்துகொண்டிருந்தது. நிலாவிற்கு போட்டியாய் இருள் தாண்டவமாடிக் கொண்டிருக்க அந்த இருளுக்குள் இருளாய் ஓர் உருவம் கோட்டையை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. யாருமறியா வண்ணம் கோட்டைச் சுவரிலே ஒரு மனிதன் புகுமுடியுமான ஒரு துளையை இடுகிறது அவ்வுருவம். தன் வேலையை செவ்வனே செய்து முடித்ததும் இறைவனையும் இருளையும் தவிர யாருமறியாவண்ணம் இருளுக்குள் மறைந்து போகின்றது அவ்வுருவம்.

கோட்டை மதில்களைத் தாண்டி சூரிய வெளிச்சம் போர்க்களத்தை தொட்டதுதான் தாமதம், போர் முரசு கொட்டியது. போர் ஆரம்பித்த மறுநொடி நேற்றைய அதே உருவம் தருணத்திற்காய் காத்திருந்தாற் போல் விரைந்து துளையினூடாகச் சென்று கோட்டை வாயிலை திறந்து விடுகிறது. யாரும் துளியும் எதிர்பார்க்காத கோட்டை வாயில் திறந்து கொள்கிறது. முஸ்லிம் வீரர்கள் மின்னலாய் நுழைகிறார்கள் கோட்டையினுள். சில வினாடிகளில் முஸ்லிம்களின் கொடி ரோமர்களின் கோட்டையில் பறக்கிறது. 

போர் முடிவடைந்ததும் தளபதி மஸ்லமா இப்னு அப்துல் மலிக் வெற்றிவாகை சூடிய தன் படையைப் பார்த்து; "கோட்டை வாயிலைத் துளையிட்டவர் யார்? அவர் இங்கு வரட்டும். அவருக்கு நாங்கள் தகுந்த சன்மானம் வழங்கப் போகின்றோம்" என்று உரைக்கின்றார்.

 ஆனால் யாரும் வரவில்லை. மீண்டும் அழைக்கின்றார். எந்த அசைவும் இல்லை. அடுத்த நாளும் அழைக்கின்றார். படைவீரர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. 

மூன்றாம் நாள் தளபதி; "துளையிட்டவர் இரவிலோ பகலிலோ, எந்த நேரமானாலும் அவசியம் என்னிடம் வர வேண்டும் என்று சத்தியமிட்டு சொல்கிறேன்" என்று கூறுகின்றார். 

மீண்டும் இருள் சூழ்ந்து கொள்கிறது. இருளோடு உறவாடிய அதே உருவம் தன் முகத்தை மறைத்த வண்ணம் தளபதியின் கூடாரத்தை நோக்கி நகர்ந்து தளபதிக்கு முன்னால் வந்து நிற்கின்றது.

"நீர்தான் துளைக்க சொந்தக்காரனா?" என்று தளபதி வினவ, "துளைக்குச் சொந்தக்காரர் தன் மாண்புமிகு தளபதியின் சத்தியத்தை நிறைவேற்ற விரும்புகிறார்" என்று கூற, முழுமதியாய் தளபதியின் முகம் பிரகாசமடைந்த மறுகணம், "ஆனால் மூன்று நிபந்தனைகள்" என்றது  அவ்வுருவம். தளபதியின் முகம் அமாவாசையானது.

"அவை என்ன?" என்றார் தளபதி வியப்பாக..

"1. அவரின் பெயரைக் கேட்கக் கூடாது.
2. அவரின் முகத்திரையை நீக்கக்கூடாது.
3. அவருக்கு எந்த சன்மானமும் வழங்க ஏவக்கூடாது" என்றது அவ்வுருவம்.

அதற்கு தளபதி " சரி, அவருக்காக அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன" என்கிறார்.

அப்போது அந்த உருவம்; "நான்தான் துளைக்குச் சொந்தக் காரன் என்று கூறிவிட்டு வேகமாகத் திரும்பிச் சென்று படைக் கூடாரங்களுக்குள் மறைந்து விடுகின்றது.

தளபதி மஸ்லமா இப்னு அப்துல் மலிக்கின் கண்கள் குளமாக நாவு பின்வரும் வசனத்தை உதிர்க்கின்றது.

' நம்பிக்கையாளர்களில்  ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டு விடவே இல்லை.' (33:23)

தளபதி உடனே இறைவனுக்கு சிரம் தாழ்த்தியவராக ஸுஜூதிலே விழுந்து "இறைவா! துளைக்குச் சொந்தக்காரனான அந்த நல்ல மனிதருடன் மறுமையில் என்னை எழுப்புவாயாக! என்று பிரார்த்திக்கிறார்.

முதன் முதலில் இச்சம்பவத்தை நான் படித்த போது அசந்தே போய் விட்டேன். அப்போது என்னுள் துளிர்விட்ட எண்ணம் அந்த துளைவாசியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதாக. இன்னும் அதே எண்ணம் அடித்தளமாய் மனதில் இருக்கிறது. தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

நடைமுறை உலகில் பலர் தங்கள் பெயரை பட்டை தீட்டுவதற்காகவும், புகழுக்காகவும், மனிதர்களிடம் நல்ல பெயரை பெற்றுக் கொள்வதற்காகவும் பல செயற்பாடுகளை செய்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனி. இவ்வாறான போக்கைத் தவிர்த்து குறைந்தது ஒரு செயற்பாடாவது எமக்கும் இறைவனுக்கும் மாத்திரமான இரகசிய செயற்பாடாக, தூய்மையானதாக இருக்க வேண்டும். அது வாழ்நாளில் தொடர்ந்திருக்க வேண்டும் .பிறையோடு புரையோடாவிட்டாலும் புரையோடியிருக்கும் புதிய ஆண்டில் ஏதாவது ஒரு செயற்பாட்டை இன்றே ஆரம்பிப்போம். அது எனக்கும் இறைவனுக்குமிடையிலான தூய்மையான இரகசிய செயற்பாடாக இருக்க வேண்டும்.

 _துளைவாசியை காணும் நாளை எதிர்பார்த்தவனாய்_ ...

SaJiDh wAhAb
Hapugastalawe