بسم الله الرحمن الرحيم 
Faizana Fairooz - Puludhiwayal
Islahiyya lac
படைப்புக்களின் படைப்பாளனான அல்லாஹ் எதையுமே வீணுக்காக படைப்பதில்லை.மேலும் எந்தவொரு செயலையுமே வீணுக்காய் செய்வதுமில்லை.அவனின் நாட்டமேயன்றி ஓர் இலை கூட உதிர முடியாது. அந்த வல்ல ரஹ்மான் எம் பிரடி நரம்பை விட மிக நெருக்கமாகவே எம்மிடமிருக்கின்றான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்

இறைவனின் எந்தவொரு செயலுமே வீணானவை அல்ல.
சிந்தித்து உணரும் சமுதாயத்திற்கு பல அத்தாட்சிகள் அவற்றில் உண்டு என்பதை அல்லாஹ் இறை வேதமாம் அல்குர்ஆனிலே அல்குர்ஆனிலே சுட்டிக்காட்டுகின்றான்.

பேரழிவுகள் எனும் பொழுது இறைவனால் ஏற்படுத்தப்படும் தண்டனைகள் என்றுகூடக் குறிப்பிடலாம். இவ்வாறான தண்டனைகள் ஏன் ஏற்படுகின்றன?
எதற்காக ஏற்படுகின்றன?
என்றெல்லாம் ஆராயும் பொழுது அது மனித சமூகத்திற்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே அன்றி வேறில்லை.

மனிதன் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும்
தெரியாமலும் அன்றுமுதல் இன்றுவரை  
ஏதோ ஒருவகையில் 
தவறிழைத்து அதற்கான தண்டனையைக் கேட்டு வாங்கிக் கொள்பவனாகவே
இருக்கிறான் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

பேரழிவுகள் ஏற்படக் காரணங்களைப் பார்ப்போமேயானால் 
முதலாவது பாவம் சமூகத்திற்கு அல்லாஹ்வை மறுக்கின்ற சமூகத்திற்கு தண்டனையைக் கொடுக்கும் முகமாகவும் மேலும் குறிப்பிட்டால் இவ்வாறான அழிவுகளால் அடுத்து வரும சமூகம் நல்லுணர்ச்சியையும் 
படிப்பினையையும் பெறவேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்படுகிறது.
இதனை அல்லாஹ் அல்குர்ஆனிலே குறிப்பிடும் போது,
     "அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே நாம் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றோம்."

இவ்வாறான பேரழிவுகளின் மூலம் மனிதன் கடந்த காலத்தில் நடந்தவை பற்றி படிப்பினைகளைப் பெறுகின்றான். மேலும் அனுபவமற்ற அறிவு என்றுமே பிரயோசனமற்றதாகவே காணப்படுகிறது
என்பதை நாம் நடைமுறையில் காணக்கூடியவர்களாக உள்ளோம்.இவ்வாறிருந்தும் சிலர் காலப்போக்கில் அவற்றை மறந்து குற்றமிழைக்கத் தொடங்குகின்றனர்.
இதனாலேயே மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படக்கூடியவர்களாகவே நாங்கள் காணப்படுகின்றோம்.

அந்த வகையில் ஒவ்வொரு சமுதாயததையும்இறைவன் ஒவ்வொரு சோதனைகளைக் கொண்டு சோதித்திருக்கின்றான்.
ஆம் சாலிஹ்   (அலை)
அவர்களின் சமூகமான 
சமூத் கூட்டத்தினரை 
வரம்பு மீறியதன் காரணமாக கொடிய சத்தத்தைக் கொண்டு சோதிக்கப் பட்டனர். அவ்வாறே ஹூத்        அலை அவர்களின் சமூகமான ஆத் கூட்டத்தினரும் கொடிய புயலைக் கொண்டு  சோதனைக்குட் படுத்தப்பட்டனர் என்பதை நாம் அறிவோமல்லவா?

நாம் நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கங்களைப் பார்ப்போமேயானால் சீர்குழைந்த சமுதாயங்களை சீராக்குவதற்காகவே அன்றி வேறில்லை.
அவ்வாறிருந்தும் மக்கள் அதை சிந்தித்து உணர்வதுமில்லை. மேலும் சிலர் ஏற்றுக் கொள்வதுமில்லை.

மக்களின் வரம்பு மீறல்கள் அதிகரிக்கும் போதே தண்டனைகளும் இறக்கி அருளப்பெறுகின்றன.
எனினும் நூஹ்  (அலை ) அவர்களின் சமூகத்தினரால் சிலர் ஈமான் கொண்ட நிலையில்  கொடிய அத்தகைய சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொண்டனர் என்பதனையும் நாம் அறிவோமல்லவா?
மனிதர்களனைவரும் சமமானவர்களே.இங்கு மனைவி, பிள்ளை என்ற வேறுபாடின்றி இணைவைப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் நோகடிக்கப் பட்டனர் என்பதனையும் அறிவோம்.

அவ்வாறே கொடுங்கோல் ஆட்சியாளன் பிர்அவ்னின் பிண்ணனியை  நோக்குவோமேயானால் 
அவனின் மனைவி அன்னை ஆசியா அவர்களை இஸ்லாத்தை ஏற்ற ஒரே  காரணத்திற்காக எவ்வாறெல்லாம் கொடுமை செய்திருக்கின்றான்.
அதுமட்டுமல்லாது பனீஇஸ்ரவேலர்களின் குழந்தைகளை உயிருடன் புதைத்தான்.அவர்கள் பொறுமையுடனே இருந்தார்கள்.
எனவே தன் மகன் என நம்பி வளர்த்தவரே அவனுக்கு எதிராக மாறினார். அவரே நம் இறைத்தூதர்  மூஸா   அலை    அவர்கள்.
தானே இறைவன் என்று 
கூறி தலைக்கணம் பிடித்தாடிய அந்த பிர்அவ்னை நைல் நதியில் மூழ்கடித்து அவனையும் அவனது கூட்டத்தினரையும் இறைவன் அழித்தொழித்தான்.
மேலும் அல்லாஹ் அல்குர்ஆனிலே,

وما منعنا ان نرسل بالايت الا ان كذب بها الاولون.
    "நம்முடைய அத்தாட்சிகளை முன்னிருந்தவர்கள் பொய்யாக்கி விட்டனர். என்பதை தவிர இவர்கள் கோரும் அத்தாட்சிகளை அனுப்ப 
வேறெதுவும் நம்மைத் தடுக்க வில்லை."
                        (17:19)

அல்லாஹ் அத்தாட்சிகளை வெளிப்படுத்துவது ஏனென்றால் ஓர் முஃமின் அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
இவ்வாறான சோதனைகள் மூலம் மனிதன் அவனிடமே மீள வேண்டும்.
அவனையே  வழிபட வேண்டும் .

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் 
ولنذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر لعلهم يرجعون.
    "மேலும் அவர்கள் பாவங்களிலிருந்து திரும்பி விடுவதற்காக மறுமையில் கிடைக்கவிருக்கும் மிகப்பெரிய வேதனையின்றி அதற்கு முன்னர் குறைந்த இம்மை வேதனையிலிருந்தும் 
அவர்களை நிச்சயமாக நாம் சுவைக்கச் செய்வோம்.
                          (32:21)

மனிதனை பாவத்திலிருந்து மீண்டு பரிசுத்தவானாக மறுமையில் கண்டு கொள்ளவும் மனிதனுக்கு பாவத்திலிருந்து மீட்சி பெறவேயன்றி வேதனைகளை இறக்கி வைக்கவில்லை என  மேலும்  வலியுருத்துகிறான்.

எம் வல்ல ரஹ்மானான அல்லாஹ் மிகவும் கிருபையாளன். என்பதனாலேயே மனிதனை இம்மையிலேயே நல்லுணர்ச்சி பெற வேண்டும் அவனுடைய இறை சந்திப்பின் போது 
அவன் தூயவனாக என்னை வந்தடைய வேண்டும் என்பதற்காகவே வேதனைகளை இறக்கியருளி பாவ மீட்சியின் பால் அழைக்கிறான்.
மேலும்,

وكم اهلكنا من قرية بطرت معيشتها فتلك مسكنهم لم تسكن من بعدهم الا قليلا وكنا نحن 
الوارثون
     "மேலும் தம் வாழ்க்கை வசதிகளின் மேம்பாட்டால் அட்டூழியம் செய்து வரம்பு மீறி விட்ட எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம்.
அவை அவர்களின் குடியிருப்புகளாகும்.
கொஞ்ச நேரமே தவிர அவர்களுக்குப் பின் யாராலும் குடியிருக்கப்படவில்லை. நாமே அவைகளுக்கு வாரிசுகளாக ஆகிவிட்டோம்."
                          (28:58)

அல்லாஹ் முன்பிருந்தவர்களை சோதித்தான். அதை அடுத்த சமுதாயத்திற்கு எத்திவைத்து  நீங்கள் அதிலிருந்து படிப்பினை பெற்று பாதுகாப்பாக வெளியேறுங்கள் என்று 
கூறுகின்றான். இருந்தும் எம் சமுதாயங்கள் சிந்தித்து உணர மறந்தே செல்கின்றன.

அந்த வகையில் அல்குர்ஆனை ஓதிப்படிக்கின்ற நாம் அதை உணர்ந்து செயற்படுவதில்லை.
ஓர் கதையாகவே படித்து மறந்து செல்கிறோம்.

இன்று உலகில் எத்தனையோ பாவச்செயல்கள் வரம்பு மீறி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.அதை நாம் கண்களால் கண்டும் காணாதது போலவே நகர்கிறோம்.
சகோதரர்களே இதனாலேயே தண்டனைகள் பல்வேறு விதங்களில் வந்தடைகின்றன.

இன்று பல்வேறு விதமாக பேரழிவுகள் எம்மை வந்தடைந்த வண்ணமே காணப்படுகின்றன. அவைகளை நாங்கள் கேள்விப்பட்ட  கணப்பொழுதுகளில் கவலையடைகிறோம்.
பின்பு  வழமைக்குத் திரும்பி அதே பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் சகோதரர்களே.

எங்கேயோ நடக்கிறது நமக்கென்ன என்று சிறிதும் பொருட்படுத்துவதில்லை. சிந்தித்துணர்வதுமில்லை.  இயற்கையை காரணங்கூறி அமைதியடைந்துகொள்கின்றோம். இது தவறல்ல. இவற்றிற்கு மாறாக அந்த வல்ல ரஹ்மானால் தான் இவையனைத்தும் நிகழ்த்தப்படுகின்றன.
அவனையே அஞ்ச வேண்டும். அவன் நாடினாலேயே கட்டுப்படுத்த முடியும் என உணர வேண்டும்.

அது அவ்வாறிருக்க இன்று நாம் எதிர் நோக்கியுள்ள மாபெரும் 
பேரழிவுகளில் ஒன்றான தொற்று நோய்  கொடிய கொரோனா வைரஸ்.

ஆம் இந்த கொரோனா வைரஸைப் பற்றி நாம் பார்க்கும் போது இது ஏன் வந்தது? எங்கிருந்து தோற்றம் பெற்றது?
எவ்வாறு வளர்ச்சியுற்றது?
மேலும் இது எவ்வாறெல்லாம் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது?
இதனால் எத்தனை பேர் பாதிப்புற்றார்கள்?
பாதிப்புருகிறார்கள்?
மேலும் இதில் எத்தனை பேர் படிப்பினை பெருகிறார்கள்?
என்று பார்க்கும் போது ஏதோ ஒரு வகையி்ல் உலகலாவிய ரீதியிலான அனைத்து மனிதர்களும் இன,மத,மொழி வேறுபாடின்றி பங்கேற்றிருக்கின்னறார்கள் என்று கூறுவதில் எந்த ஐயமுமில்லை.
அனைவருமே ஏதோ ஒரு வகையில் பங்கேற்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க 
இந்த கொரோனா வைரஸானது சீனாவில் வூகான் நகரை பிறப்பிடமாகக் கொண்டு உலகலாவிய ரீதியில் தற்போது வல்லரசுகளையும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைத்து வருகிறது. இது மனிதனின் வேலையாக இருந்திருந்தால் எத்தனை போராட்டம்.
எப்படி சீரழிவு சுபஹானல்லாஹ்.
அனைத்துமே தற்பொழுது வரை இறைவனின் கையிலே
உள்ளது எவராலும் மறுக்க முடியாது.
இது அல்லாஹ்வின் சோதனை என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

இறைவன் அல்குர்ஆனிலே அன்றே ஹலால் ஹராம்
பற்றி கூறிவிட்டான்.கண்மணியாம் இறைதூதரும் வாழ்ந்து காட்டிச் சென்று விட்டார்கள். 
இனியென்ன இவற்றையெல்லாம் மனிதன் மீறினால் அல்லாஹ்வின் ஆற்றலை அவன் காட்டவே செய்வான்.
அவனே வல்லோன்.
மனிதன் வரம்பு மீறக்கூடியவன். அவன் காலப்போக்கில் அனைத்தையும் மறந்து செயற்படுகின்றான்.
எனவே மனிதனை நேர்வழிப்படுத்தவே 
அல்லாஹ் சோதனைகளைப் பிறப்பிக்கின்றான்.
மீளக்கூடியவர்களை ஏற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறான்.

மேலும் இஸ்லாத்தில் சுத்தம் பற்றி பல வருடங்களுக்கு முன்னேயே வலியுருத்தப்பட்டது.
சுத்தம் ஈமானின் பாதி என்றும் குறிப்பிடப்பட்டு விட்டது.  இவ்வாறிருக்க இன்று கொரோனா தொற்று ஏற்படக்காரணம் சுத்தமில்லாமை என்ற
ஒரு கருத்தும் வெளியாகியுள்ளது.
அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்,
என்றெல்லாம் கூறப்படுகிறது.

இதனையே இஸ்லாத்தில் உழூ எனும் பெயரில் கை,கால்,கண்,மூக்கு,வாய்,காது என்று பாராமல் அணு அணுவாக சுத்தத்தை வலியுருத்துகிறது.
இவற்றை உரிய முறையில் பேணி ஒழுங்காக செய்தாலே போதும். சுத்தம் எம்மில் குடி கொண்டு விடும்.
இஸ்லாம் உடல்,  உடை,        உள சுத்தங்களையும் அவ்வாறே வலியுருத்துகிறது.

இந்தக் கொரோனா தொற்று மேல்சாதி கீழ்சாதி என்று பாராமல்
அனைவரையும் ஆட்டிப்படைத்து ஆட்கொண்டுள்ளது.

மேலும் இக்காலப்பகுதியிலேயே கொரோனா வைரஸின் பரவலையடுத்து பாடசாலைகள், கல்லூரிகள், தொழில் நிலையங்கள் அனைத்துமே உலகளாவிய ரீதியில் இழுத்து மூடப்பட்டுள்ளது.மேலும் இன்றைய நவீன யுக வளர்ச்சி தொழிநுட்ப சாதனங்களிலேயே தங்கியுள்ளது. எனவே ஏழை மகன் முதல் பணக்காரர் வரை உண்டானோ உறங்கினானோ தொழிநுட்ப  சாதனங்களின் பால் தேவையுடையவனாக காணப்படுகின்றான்.

மாணாக்கள் நவீன தொழில்நுட்ப  உலகில் பிரவேசித்து ஆசிரியர்களால் கூட கொடுக்க முடியாத புதிய புதிய விடயங்களையும் தகவல்களையும் திரட்டி சாதனைப் பக்கங்களை 
புரட்டுகின்றார்கள்.

மேலும் இந்த கொரோனா தொற்றின் மூலம் பல மனிதர்களின் பொருளாதார நிலை பாதித்துள்ளது.
     "கல்லினுள்ளே இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் அல்லாஹ்வே."
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இறைவனிடமே மீளக்கூடியவர்களாகவும் காண்கின்றோம்.
இதுவல்லவோ மாபெரும் வெற்றி.

அனைவரும் வீட்டினுள்ளே முடங்கிக் காணப்படும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.
வீட்டின் தலைவர்கள் விழித்துக் கொண்டனர்.
தன் குடும்ப நிர்வாகத்தை சரிப்படுத்த முன் வருகின்றனர்.
குடும்ப உறுப்பினர்களிடையே புரிந்துனர்வுகள் ஏற்படத் தொடங்கின.
ஆன்மீக அமர்வுகள், வீட்டில் ஜமாத் தொழுகைகள், அன்றாட  
வீட்டு வேளைகள் தம்மிடையே பகிரப்பட்டு 
புரிந்துணர்வுகளினுடனான வாழ்க்கை தொடங்கலாயிற்று.



இவ்வாறான கெட்ட நடத்தைகளை கையாள்வதால் முஸ்லிம்களை அடக்கியொடுக்கலாம் என்றா எண்ணுகிறார்கள்?
இல்லை.  ஒருபோதும் இல்லை.
முஸ்லிம் என்பவர்கள் மரணத்திற்கு பயந்து ஒதுங்குபவர்களல்லர்.

மாறாக நெஞ்சங்களில் ஈமானை சுமந்து அஞ்சா நெஞ்சத்தோடு  அறிவோடு செயற்படுகின்றவர்கள்.
இவ்வாறான மூடத்தனமான முட்டாள் வேலை செய்ய முயல்பவர்களல்ல.

ஏன் இதை அவர்கள் உணர்வதில்லை?

இறைவா!
இந்த நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது.நீ சிந்தித்து நேர் வழி பெறட்டும் என்று அனுப்பிய சோதனை இன்று உன் அடியான்களையே அடிமைப்படுத்த உந்து சக்தியாய் கையாளப்படுகிறது.

பாவம் அந்தப் பச்சிளம் பாலகன் என்ன தவறு செய்தான். நினைக்கையிலே கண்ணீர் பொங்கி வழிகிறது. இருந்தும் உன்னிடம் கையேந்துவதை நாம் விட்டு விடவில்லை.
இறைவா!
எம் சமூகத்தை நீ மன்னிக்க வேண்டும்.
அநியாயக்காரர்களை 
நேர்வழியின் பால் அழைத்து விடு.
இல்லையேல் இவ்வுலகிலேயே எம்முன்னே தண்டித்து விடு.

ஏன் உணர்ந்து கொள்வதில்லை.

மானிடா !
மறந்து விட்டாயா ?
எம் சமூகத்தை முகமூடி போடும் கொள்ளையர்கள், கொலைக்காரர்கள் என்றெல்லாம் சித்தரித்தாயே.
இன்று உலகெங்கும் மூலை முடுக்கென பாராமல் 
சிறியவர், பெரியவர், ஆண், பெண் என பாகுபாடின்றி அனைவரும் இழுத்து மூடிக்கொண்டு இடம்பெயரும் நிலை
வந்து விட்டதை எப்போதேனும் நீ சிந்தித்ததுண்டா!

மானிடா ! 
எம் பெண்களை வைத்தியசாலை வங்கியென்று பாராமல் 
ஹிஜாபை கழற்றி வீசியெரிந்தாயே !
அதுவும் ஞாபகமுண்டா ?
இன்று  அதே தலைகீழாக மாறி
மூடாமல் உள்ளே வரவேண்டாம் என்று உன் வாயாலேயே சொல்லும் நிலை உருவாகி விட்டதை.
இதையேனும் சிந்தித்ததுண்டா?

சிந்தித்து உணர்ந்து கொள்.
   “ அவன் நாட்டமேயன்றி ஓர் இலை கூட  தரையைத் தொடுவதில்லை.”
நீ செய்யும் அடக்குமுறையும் அநியாயமும் உனக்கு வேண்டுமானால் சாதனையாக இருக்கலாம்.
இது முஸ்லிம்களுக்கொன்றும் புதிதல்ல. முஸ்லிம்கள் சோதனைக்காகவே படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களே அனைத்திலும் சாதனையாளர்கள். 
இன்ஷா அல்லாஹ்.

எனவே நாம் இவ்வாறான பேரழிவுகளை ஓர் சோதனையாகவே 
பார்க்க வேண்டும்.
நம்பிக்கை கொள்ள வேண்டும். அவன் நாடினால்   “குன்” என்ற வார்தை கொண்டு ஓர் நொடியில் அனைத்தையும் இல்லாமலாக்கி விடுவான்.

மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் பொருமையைக் 
கடைபிடிக்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.
அவன் நாடியதேயன்றி வேறேதும் நடந்தேரியதில்லை.
எனவே இயற்கையை திட்டித் தீர்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
அல்லாஹ் கூறுகின்றான்
    “நான் காலமாக இருப்பேன் என்னை ஏசவேண்டாம்.”

நம்  கண்மனியாம் இறைதூதர் அனைத்து சந்தர்ப்பங்களிற்குமான 
துஆக்களைக் கற்றுத்தந்துள்ளார்கள்.
அந்த துஆக்களை பொறுமையோடு  ஓதிவரவேண்டும்.
எப்போதும் இறைவனை யே சார்ந்திருக்க வேண்டும்.

இவ்வாறான பேரழிவுகளைக் கண்டு 
பயப்பட வேண்டும்.
அஞ்ச வேண்டும். நல்லுணர்ச்சி பெற வேண்டும். மாற வேண்டும். இதனையே அல்லாஹ் அல்குர்ஆனிலே  நாங்கள் பல சமுதாயங்களை அழித்தோம்.சிந்திப்போருக்கு  தெளிவான அத்தாட்சி இருக்கிறது
என கூறுகின்றான்.

ஆனால் இன்று அக்கிரமும்  அநியாயமும் தெளிவாக சமூகத்தில் சர்வசாதாரணமாகிவிட்டது.

இறைதூரர்  ஸல்   அவர்கள் கூறினார்கள்.
பாவம் , தீமை அதிகரித்தால் அழிவு வரும் வந்தே தீரும்.
அது இன்று நடப்பதை நாங்கள் காண்கிறோம்.
எனவே பாவம் அதிகரித்தால்  இறைவனிடமிருந்து 
எச்சரிக்கை வரும்.
அனைவரும் பீடிக்கப்படுவர்.
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது இல்லாவிட்டால்  நாம் தண்டிக்கப்படுவோம் சகோதரர்களே.

எனவே எமதிறைவன் எமக்கு விதித்த எதுவுமே  வீணானவை அல்ல.
அனைத்திலுமே பாடங்களும் படிப்பினை களும் உள்ளன என்பதை மனதிற் கொண்டு புரிந்துணர்வினூடாக ஒன்றினைவோம்.

    “விதியை மதியால் வெல்ல முடியாது. துஆவால் வெல்ல முடியும்.”
இன்ஷா அல்லாஹ்.

 Faizana Fairooz.
 Puludhiwayal.
 Islahiyya lac.
 No 003.