Fathima Ashra Farook - Kalmunai
அறிவு பரந்தும் ஆற்றல் வளர்ந்தும், விஞ்ஞானமோ விருட்சமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் வேகமாய் படர்ந்தும்,
"குன்" என்ற வார்த்தை கொண்டவனின் வல்லமையின்  முன்னால் தலை குனிந்து நின்று கொண்டிருக்கின்றோம்.............
எதை எதையோவெல்லாம் சாதித்தவர்கள் நாம் என்று மார் தட்டிக் கொண்டு ஏகாதிபத்தியத்தால் ஏப்பம் விட்டு நாம் வல்லரசு என வாய் சவால் பேசி வாழ்ந்தவர்கள், கண்ணுக்கு தெரியாத உயிரியைக் கொண்டு கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டுபவனின்   ஆற்றல் இன் முன் வாயடைத்துப் போய் நிற்கின்றது....

காசும் பணமும் கட்டி கட்டி வைத்திருந்தும், ஒரு சாண் வயிற்றுக்கு உணவு கொடுக்க முடியாமல், வீட்டுக்குள்ளேயே பரதேசிகளாக வாழும் காலத்தை அனைவரும் எதிர்பாராத வண்ணமாக எதிர் கொண்டுள்ளோம்.....

புற்றுநோய்க்கும் வைத்தியம் பார்த்து வாழ வைக்கும் காலத்தில் சாதரண இருமலைக்கூட எதிர் கொள்ள முடியாத பலகீனர்களாக பதியப்பட்டு விட்டோம்....... 

அத்தோடு மனித உடல்கள் குப்பைகளாக விதைக்கப்பட கிடங்குகள் தோண்டப்படுகிறது..
அது நிரம்பி வழியவே வேறுவழி இல்லாமல் வீதிகளில் வெட்டி புதைக்கப்படுகின்றது..
இப்படி ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், மண்ணுக்குள் இருந்து வந்த மனிதனை மறுபடியும் மண்ணுக்குள் வைக்கவே அஞ்சுகிறோம் என்று மறைமுகமாக அரசியல் பேசி, பச்சிளம் பிஞ்சு எனவும் பாராமல்... வுழூவும் இல்லாமல் தொழுகையும் இல்லாமல் நெருப்புக்கு விறகாய் மனித உடல்கள் எரிக்கப்படுகின்றது..

பள்ளிகளில் தொழுகை இல்லாமல், பாடசாலைகளிலும் கல்வி இல்லாமல் ஊரார் அனைவரும் உயிரோடு இருக்க, ஊர் என்னவோ மரண வீடாகவே காட்சி தருகின்றது.....
பெயர் தெரியா நோயால் ஒரு கூட்டம் மரணித்து கொண்டிருக்க பட்டினி என பெயர் தெரிந்தும் பழகிக் கொள்ள முடியாமல் சில உயிர்கள் பறி போய் கொண்டிருக்கின்றது...
இப்படி விடை தெரியாத கேள்விகளுடன் வேதனையோடு நாட்களை கடத்தி கொண்டிருக்கையில் வேகமாய் வீசிய நிவார்  புயலில் மிச்சம் சொச்சமாய் மிஞ்சி இருந்த நிம்மதியும் மிச்சம் மீதி இன்றி தொலைந்து போனது... ஏற்கனவே உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும், அதிகம் உடைந்து இருந்த போது வீசிய இப்புயல் நம்மில் பலரது வாழ்வை சீரமைக்க சிரமப்படக்கூடிய சிக்கலாக மாற்றியது... 
மேலும் அதனை தொடர்ந்து பெய்த தொடர் மழையும், அதன் விளைவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அனேகமானவர்களை தங்குமகடங்களில் தஞ்சம் அடைய வைத்துள்ளது...
அத்தோடு அசாதரண முறையில் அடிக்கடி நில அதிர்வுகளையும் எதிர்கொண்டு இருந்து கொண்டிகருக்கிறோம்......

இப்படி அடுத்தடுத்ததாக எம்மை முன்னோக்கும் இயற்கை பேரழிவுகள் அனைவரது உள்ளத்தையும்உண்மையிலேய உருக்குலைய வைத்துள்ளது. . அந்தவகையில் இது எதனையும் வெறுமனே இயற்ககயின் சீற்றமாக மாத்திரம் கருதி அத்தோடு மாத்திரம் நம் சிந்தனையை முடக்கி கொள்வது ஆரோக்கியமான செயல் அல்ல...... மாறாக இதனை படைத்தவன் புறத்தில் இருந்து இறக்கப்பட்ட சோதனையாகவே* கருதவேண்டும்... 
அல்லாஹ் தன் திருமறையில், பசியைக் கொண்டும், நோயைக் கொண்டும் அச்சத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம் என குறிப்பிடுகின்றான்.. இதனை தான் நாம் நிதர்சனத்தில் இன்று நிகழ காண்கிறோம்..
அவன் வாக்களித்த சோதனைகளை இன்று நாம் ஒரே நேரத்திலேயே முழுவதுமாக எதிர் நோக்கியுள்ளோம்....

 உண்மையிலேயே ...
 _அல்லாஹ்வுடைய வாக்கு ஒருக்காலும் பொய்க்காது_ என்ற உண்மையையே நாம் இதன் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும்......

அல்லாஹ் தன்னுடைய அருள் மறையில் இப்படி பல சத்தியங்களையும் உண்மைகளையும் நாம் புரிந்து நடக்க வேண்டும் என்று தெளிவாகவும் தீர்க்கமாகவும் அருளியுள்ளான்.. ஆனால் நாமோ அதனை விட்டும் பராமுகமாகவே வாழ எத்தனித்தபோது, மேலும் அதிலிருந்து படிப்பினை பெற்று சிந்தனையை சீர் செய்ய முற்படாத போது, இத்தகைய சோதனைகளை நம் மீது இறக்கி நம்மை அவற்றையெல்லாம் உணரும் படி உணர்வுப்பூர்வமான பாடத்தை நமக்கு அந்த றஹ்மான் புகட்டி உள்ளான்......

சாதாரணமாக உலகில் நமக்கு ஏற்படக் கூடிய சோதனைகளைப் பற்றி அவன் வாக்களித்ததை ஒரே நேரத்தில் அவன் நிகழ்த்தும் போது, அதன் பயங்கரத்தை தாங்க முடியாமல் தவிக்கின்றோம்..... 
அப்படியிருக்க, இதைத் தவிர அவன் வாக்களித்துள்ள மறுமை பற்றியும், அதன் பயங்கரத்தை பற்றியும், மரணத்துடைய போதையை பற்றியும், அவன் வாக்களித்துள்ள விடயங்கள் நம்மை எதிர் கொண்டால் நம் நிலை எப்படி இருக்கும்???
இதைத்தான் நாம் உணர கடமைப் பட்டுள்ளோம்.....

உதாரணமாக... 
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் உலகை பீடித்த கொரோனாவைப் பற்றி நாம் கூறுவதெல்லாம், இதைப் பற்றி நாம முன்னரே அறிந்திருக்கவில்லையே என்பது தான்...... உண்மையில் இத்தகைய நோய் நம்மை பீடிக்கும் என்று நாம் முன்னரே அறிந்து இருந்தால்... அதற்கான தடுப்பூசியை எப்போதோ கண்டுபிடத்து அதற்காக நம்மை நாம் தயார்படுத்தி இருப்போம் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.......
இந்த இடத்தில் தான் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்... கைசேதப் பட வேண்டும்.......
படைத்தவன் நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தின் அர்த்தம் புரிந்து படிப்பினை பெற வேண்டும்....

மரணத்தோடு முடிவடைந்துவிடும் நோயிற்கே முன்னறிவிப்பு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நொந்து கொள்ளும் நாம், மரணமே இல்லாத நிரந்தர வேதனையை கொண்டிருக்கும் மறுமையை பற்றி படைத்தவன் தெளிவாக முன்னறிவிப்பு செய்திருந்தும், அதற்கு தயாராகுவதை பற்றி மட்டும் பராமுகமாக இருந்து வருகிறோம்....
இந்த விடையத்தை தான் அந்த றஹ்மான், நாம் படிப்பினை பெற வேண்டும் என்று இந்த சோதனைகளைக் கொண்டு, ஒரு பாடமாக புகட்டிக் கொண்டிருக்கின்றான்.....

இந்த உலகத்தையும், இதில் நாம் எதையெல்லாம் நம் சக்திக்கு அப்பாற்பட்டது, விந்தையானது என்று வாய் நிரம்ப பாராட்டிக் கொண்டிருந்த விடயங்களையும், விஞ்ஞானத்தையும் தன் மெய் ஞானத்தின் முலம் அஞ்ஞானமாக்கி தன் வல்லமையை  தெளிவாக காட்டிக் கொண்டிருக்கின்றான்.....
தான் தான் வல்லரசு, தன்னால்தான் எல்லாமே முடியும் என தற்பெரைமை தட்டிக் கொண்டிருந்த அத்தனை பேரையும், அவர்களது பொருளாதாரத்தையும் தவிடுபொடியாக்கி தன்னுடைய வல்லமையை நிரூபித்து,, எதன் பின்னால் நாம் தலை தெறிக்க அவனை மறந்து ஓடிக் கொண்டிருந்தமோ, அவை அத்தனையும் அற்பம் எனக் காட்டி, ஒரு கணம் நம்மை திரும்பிப் பார்த்து பாடம் கற்கும்படி செய்த அந்த றஹ்மான், உண்மையிலேயே ஆசானுக்கெல்லாம் சிறந்த ஆசானாவான்....

குர்ஆனிலே, சூறா அத்தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்று) எனும் சூறாவில், புழுதியைக் கிளப்பும் காற்றின் மீதும், மழைச் சுமையை சுமந்து வரும் மேகத்தின் மீதும், அவன் சத்தியமிட்டு கூறி இருப்பதன் பிண்ணனியை யாரெல்லாம் அந்த வகையான காற்றையும் மழையையும் கொண்டு சோதிக்கப் பட்டோமோ அவர்கள்  அனைவரும் உணர்ந்து கொண்டிருப்போம்......
 அவன் சத்தியமிட்டுக் கூறிய காற்றும், மழையும் எப்படி சாதாரணமானதாக இல்லையோ , அது போல் தான் குர்ஆனிலே அவன் தான் சத்தியமிட்டு நடந்தே தீரும் என வாக்களித்துள்ள மறுமையும் நிச்சயம் சாதாரணமானதாக இருக்காது என்ற படிப்பினையை நாம் இதன் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்....
அதன் பயங்கரத்தை உணர்ந்து அதற்காக தயாராக வேண்டும்...... அதைத்தான் இத்தகைய இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்தியதைக் கொண்டு நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கின்றான்...

நம் வாழ்வில் அவன் அருளிய அருள்களை அனு அனுவாய் அனுபவித்த நமக்கு அவனுடைய வேதனை இறங்கும் படி நம் மீது இறங்கினால் எப்படி இருக்கும் என்ற யதார்த்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.... அவன் வாக்களித்த மறுமை வாழ்வின் வெற்றிக்காக அவன் பால் திரும்ப முயற்சிக்க வேண்டும்...

ஆனாலும் இன்றும் பலர் இது எதையுமே உணராது, எவற்றைக் கொண்டும் படிப்பினை பெறாது, ஊருக்கெல்லாம் போலத்தான் நமக்கும்  என்று இன்னும் ஐந்தறிவு உடைய பிராணிகளைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்... மேலும் இத்தகைய சோதனைகளின் போதும் என்றும் கிடைக்காத அருளாக கிடைத்துள்ள ஓய்வை பொழுது போக்கிலும், வீண் விளையாட்டுக்களிலும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.....
இத்தகையோரை பார்த்துத்தான் அல்லாஹ், உங்களுடைய உள்ளங்கள் பூட்டுப் போடப்பட்டுள்ளனவா?? என கேட்கின்றான்.....

அந்த வகையில் எம்மை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் எந்த அழிவையும் வெறும் இயற்கையின் சீற்றம் என்றும், விஞ்ஞானத்தில் ஏற்பட்ட கோளாறு என்று உயிர்ப்பற்ற வார்த்தைகளை உச்சரிப்பதை விட்டு விட்டு.........
நாம் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகத்தான் படைத்வனால் பாடம் புகட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து அவன் பக்கம் மீள முயற்சி செய்வோம்....
 இன்ஷா அல்லாஹ்...🤲🏻
 "உறுதியாக நம்பிக்கை கொண்டோருக்கு பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன"

✒️ _Fathima Ashra Farook
 _Kalmunai
 Reg No- 05