நவீனமயப்படுத்தப்பட்ட இன்றைய இருபத்தொறாம் நூற்றாண்டிலே நாளாந்தம் எண்ணற்ற நவீன ஊடகங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.அந்த ஊடகங்களிலிருந்து பல்வேறு எண்ணற்ற தகவல்கள் எம்மை தினந்தோறும் வந்துக்கொண்டே இருக்கின்றன.
இவ்வாறான தகவல்கள் எதனடிப்படையில் அமையப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை பின்வருமாறு அலசி ஆராயலாம்.
அதாவது எம்மை வந்தடைகின்ற தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்றோ,அல்லது அனைத்தும் பொய்யானது என்றோ எம்மால் கூறிவிட முடியாது.ஒரு சில தகவல்கள் உண்மையானதாகவும்,இன்னும் பல தகவல்கள் பொய்யானதாகவும் , போலியானதாகவுமே மக்களின் கைகளுக்கு வந்தடைகின்றது.
சமூகத்தை சீரழிவுக்கு இட்டுச் செல்லாத, சிறந்த சிந்தனையின் பக்கம் இட்டுச் செல்லக் கூடிய அடித்தளமாக சமூக வலைத்தளங்கள் அமையப்பெற்றிருத்தல் வேண்டும்.
அதாவது சமூகத்திற்கு வழங்கக் கூடிய தகவல்களை " அன்னப் பறவைப் போன்று எது பால் ? எது நீர்? " தெள்ளத் தெளிவாய் பிரித்தறிவதைப் போன்று அலசி ஆராய்ந்து உண்மையான தகவல்களையே வழங்க வேண்டும்.அப்போது தான் இதனால் ஏற்படுகின்ற பாரிய விளைவுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.இதுவே பொதுமக்களுக்கு செய்கின்ற தர்மம் ஆகும்.
இஸ்லாமிய சட்டத்திட்டங்களையும் ,ஒழுக்கவிழுமியங்களையும் பேணுவதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய கலை,கலாசாரங்களுக்கு ஏற்ப செயற்படுவதே சாலச் சிறந்ததாகும்.
ஓர் முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும்,பண்பாடுகளையும்,குணாதிசயங்களையும் அல்குர்ஆன் மற்றும் சுன்னா தெளிவாக கூறியுள்ளது.இதனை சமூகவலைத்தளங்களும் ,ஊடகவியலாளர்களும் பின்பற்றுவதனூடாக பொதுமக்களுக்கு நன்மைகளை பயக்கும் என்பதில் ஐயமில்லை.
1.கிடைக்கப்பெற்ற தகவலை உறுதிப் படுத்திக் கொள்ளல்.
உறுதிப்படுத்தும் தன்மை என்பது ஊடகத்தின் மிக முக்கியமான ஒன்றாகும்.ஒருவரிடம் ஒரு தகவல் கிடைத்தால் அந்த தகவலை உடனடியாக பரப்பி விடாமல் அந்த செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ளல் வேண்டும்.அதனை அலசி ஆராய்ந்து அக்குவேர் ஆணிவேர் என பிரித்தறிந்தவுடன் அதன் உண்மைத்தன்மை தெளிவடைந்தவுடன் தான் அச்செய்தியை வெளியிட வேண்டும்.இதுவே முஸ்லிமின் பண்பாக அமைதல் வேண்டும்.
தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலை எந்தவொரு உறுதிப்படுத்தலும் இல்லாமல் வெளியிடுபவன் அவன் பொய்யன் என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
இன்று பொதுவாக சமூகத்தில் வதந்திகள்,ஆதாரமற்ற தகவல்கள்,பொய்கள்,கற்பனை கதைகள் ,பக்கச் சார்பான தகவல்கள் என்பன சர்வ சாதாரணமாக வெளியிடப்படுகின்றது.இதனை துல்லியமாக ஆராய்த பின்னர் தான் வெளியிட வேண்டும்.
இதனை தான் அல்லாஹ் தனது மறையிலே பின்வருமாறு குறிப்பிடுகிறான் " நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.இல்லையேல் நீங்கள் செய்ததற்காக கவலைப்படுவீர்கள்."( ஹுஜ்ராத் : 06 )
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் ஊடாக எந்தளவிற்கு உறுதித் தன்மை அமைய வேண்டும் என்பதை மட்டுமல்லாமல் மறுமையை பயந்து செயல்பட வேண்டும் என்பதையும் இது உணர்த்தி நிற்கிறது.
2.நியாயமும் வீரமும் கொண்டமைந்ததாக இருத்தல் வேண்டும்.
இது சமூகவலைத்தளத்தின் மிக முக்கியமான பண்பாகும்.அதாவது இன்றைய கால கட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான தகவல்கள் பக்கச் சார்பானதாகவே காணப்படுகின்றது.அரசுக்காகவும் , நண்பர்களுக்காகவும்,அயலவர்களுக்காகவும்,பணம் ஈட்டுவதற்காகவும் போலியான தகவல்களை வெளியிட்டு பெருமை அடைகிறது.
இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.ஓர் முஸ்லிமை பொறுத்தவரை நியாயத்தோடும்,நீதியோடும்,நேர்மையோடும்,துணிச்சலோடும் தகவல்களை வெளியிட வேண்டும்.
" நீங்கள் நீதியாக நடவுங்கள் அப்படி நடப்பது இறை பக்திக்கு மிக நெருக்கமானதாகும்"( ஸுறா மாயிதா : 08) என அல்லாஹ் கூறுகின்றான்.
ஆகவே இது தொடர்பாக மறுமையில் கேள்வி கேட்கப்படும் எனும் பயத்துடன் தகவல்களை வெளியிடல் வேண்டும்.
3.உண்மையானதாக இருத்தல் வேண்டும்.
வெளியிடப்படுகின்ற தகவல்கள் உண்மையானதாக இருத்தல் வேண்டும்.பொய்யாக அமைதல் கூடாது.ஏன்னென்றால் ஒரு முஸ்லிம் பொய் பேச கூடியவனாக இருக்க மாட்டான்.
"நயவஞ்கத்தின் பண்புகள் நான்கு ஆகும்.அதில் பொய்யும் ஒன்றாகும்."
ஆகவே நாம் நயவஞ்சகத்தின் பண்பிலிருந்து விலகி உண்மையான தகவல்களை மாத்திரம் வெளியிடும் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
4.சுதந்திரத்தை பேணி பாதுகாப்பதாய் அமைதல் வேண்டும்.
இன்று ஊடகத்தில் பேசு பொருளாக இருக்கும் விடயமாக சுதந்திரம் காணப்படுகின்றது.அதாவது சிலர் ஊடகங்கள் மூலமாக பொதுமக்களது மத மற்றும் கருத்துச் சுதந்திரங்களை தட்டி கழிப்பதாகவும்,வெட்டி பேசுவதாகவும்,சுதந்திரத்தை முடக்கியவாறு தகவல்களை வெளியிடுவதாக காணப்படுகிறது.இவ்வாறு செய்வது பெரும் குற்றமாகும்.அவற்றை பேணி பாதுகாப்பதாக அமையும் வலைத்தளமாக இருத்தல் வேண்டும்.
பிறர் கருத்து தெரிவிக்கின்ற சந்தர்ப்பத்தில் அவரை புண் படுத்துவதோ,அல்லது அவற்றுக்கு எதிராக கிண்டல் அடிப்பதையோ,அல்லது இடமறித்து கருத்து தெரிவிப்பதையோ,அல்லது வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்தல் வேண்டும்.
குறிப்பாக மாற்று மத சகோதர்களின் கருத்துக்கு இடையில் புகுந்து பேசுவது , எழுதுவது போன்றவற்றை முற்று முழுதாக தவிர்த்தல் வேண்டும்.
அவர்களுடைய கருத்திற்கு மதிப்பளித்து அன்பாகவும், பண்பாகவும்,நளினமாகவும் செவி சாய்க்க வேண்டும்.
"அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குபவர்களை நீங்கள் ஏச வேண்டாம்.அப்படி நீங்கள் ஏசுகின்ற போது அவர்கள் அறியாமையின் காரணமாக அல்லாஹ்வை அவர்கள் திட்டுவார்கள்.( ஸுறா அன்ஆம் : 108 )
என அல்லாஹ் கூறுகின்றான்.
முஸ்லிமாகிய நாம் மாற்றுக் கருத்தாளர்கள் கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமலும்,விமர்சிக்காமலும் அவர்களது நலன் கருதி அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்க வேண்டும்.
ஊடகங்களானது சமூகத்தில் உள்ள குற்றச் செயல்கள் ஒழிய வேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டுமோ தவிர அதனை வளர விடக் கூடாது.
ஒருவரின் மானத்தோடு தொடர்புடைய விடயமாக இருந்தால் அதனை கவனமாக கையாளுவதோடு அதனை சிறந்த முறையில் முன்வைக்க வேண்டும்.
அவர்களுடைய மானம் போகும் அமைப்பிலும் ,அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தகவல்களை வெளியிடக் கூடாது.
அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும், விபரீதங்களையும் சிறந்த முறையிலும் பொறுப்புடனும் செயலாற்ற வேண்டும்.
" நிச்சயமாக விசுவாசிகளுக்கு மத்தியில் மானக் கேடான செயல்கள் பரவ வேண்டும் என யார் விருப்பம் கொள்கிறார்களோ அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனை உண்டு."( அல் குர்ஆன் )
ஆகவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும் போது சமூகவலைத்தளமானது எவ்வாறான அமைப்பில் இருத்தல் வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது.
~முஹம்மது றிஸ்வி பாத்திமா சபிfய்யா
புத்தளம்
Reg no.011
0 Comments