சமூக வலைத்தளங்கள் எனும் போது அவை சமூகத்தின் பல செய்திகளையும் உலகின் மூலை முடுக்குகளில் வாழும் பல்வேறு நபர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கானதோர் வலையமைப்பென இலகுவாகப் பொருள் கொள்ளலாம்.அந்தவகையில் சமூகவலைத்தளங்களின் பாவனையானது இன்று  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஆக்கிரமித்துள்ளமையை மறுப்பதற்கில்லை. அதன் பாவனையானது நாளுக்குநாள் வயது வித்தியாசமின்றி பல்வேறுபட்ட வசதிகளுடன் அதிகரித்த வண்ணம் காணப்படும் அதேவேளை பல்வேறுபட்ட நோக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையையும் நாம் காணலாம்.
இதனடிப்படையில் "சமூகவளைத்தளங்களும் நாமும்" எனும் தலைப்பில் இக் கட்டுரையை வரைவதானது எம்மை நாமே ஒருமுறை முஹாஸபா செய்வதற்கானதோர் வாய்ப்பாக அமையுமென நினைக்கின்றேன்.(இன்ஷா அல்லாஹ்)

அந்தவகையில் எம் மத்தியில் காணப்படும் வளைத்தளங்களை நாம் Whatsapp,Twitter, Facebook,Youtube, Instagram,Yahoo....  என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவ்வாறான சமூக வளைத்தளங்களில் எமது செயற்பாடானது எவ்வாறு அதிகரித்துள்ளதோ அதேபோன்றை அதற்காக செலவழிக்கப்படும் நேரமும் கூட அதிகரித்தை காணப்படுகின்றது.
எனினும் அந்நேரங்கள் பயனுள்ள வழிகளில் செலவழிக்கப்படுகின்றதா? அல்லது வீணான முறையில் செலவிடப்படுகின்றதா? என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.காரணம், மனிதர்களில் அதிகமானோர் இவ் ஓய்வு எனும்  அருட்கொடையை நல்ல, பயனுள்ள வழிகளில் செலவு செய்வதில் பொடுபோக்காகவும் கவனக் குறைவாகவுமே இருக்கின்றனர்.இதனையே,
"மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஓய்வு 2.ஆரோக்கியம் " (புகாரி) என நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

எனவே அந்தவகையில் எம்மில் பலர் இவ் சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கிற்காக,தஃவா விடயங்களுக்காக,கல்வி நடவடிக்கைக்காக மற்றும் சமூக நன்னோக்குத் திட்டங்களுக்காக என பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில் எமது Whatsapp பாவனையை எடுத்து நோக்கினால் அவற்றில் பல்வேறு வசதிகளுடன் சமூகத்திற்குத் சேவையான பல பயனுள்ள தகவல்களைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.எனினும் எம்மில் பலர் இது தொடர்பில் பொடுபோக்காகவும் ,அதுகுறித்தான அதீத கவனமெடுக்காதவர்களாகவுமே இருக்கின்றோம்.
குறிப்பாகப் பெண்களைப் பொறுத்த வரையில் தமது புகைப்படங்களைப் படம் பிடத்து அவற்றை ஏனைய ஆண்கள் இரசிக்கும் விதமாக ,பித்னாக்களைத் தூண்டும் விதமாக Whatsapp Status களில் பதிவிடுகின்றனர்.அதேபோன்று தமது Profile களில் தமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.இன்னும் சில ஆண்களும் பெண்களும் சினிமா நடிகை மற்றும் நடகைகளைத் தம் Role Model ஆகக் கொண்டு அவர்களைத் தம் Profile Picture ஆகவும் வைத்திருக்கும் அதேவேளை இன்னும் சிலர் ஆபாசமான மற்றும் இஸ்லாத்திற்கு மாற்றமான வாசகங்களைத் தமது About களாகவும் பதிவிட்டு வருவதனையும் நாம் சமூகவளைத்தளங்களில் காண முடிகிறது.அதுமாத்திரமல்லாது இன்னும் சிலர் இசைகளையும் ஆபாசமான படங்களையும் தம் Status களில் பலர் பார்க்கும் விதமாக பதிவிடுகின்றனர்.இவர்கள் தாமும் பாவம் செய்து பிறரையும் பாவம் செய்யத் தூண்டுகின்றனர்.

مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا

 [ அந்நிஸா:85 ]
"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்".

இன்னும் இவ்வாறான சமூக வலைத்தளங்களில் உள்ள வசதிகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு குரல் மாற்றிகளைப் (Voice Changer) பயன்படுத்தி ஆண்கள் பெண்களைப் போன்றும் பெண்கள் ஆண்களைப் போன்றும் தமது குரல்களை மாற்றி குறுஞ்செய்திகளைப் பதிவிட்டு பலரையும் ஏமாற்றிவரும் பல்வேறு சம்பவங்களும் கூட எம் மத்தியில் இடம்பெற்று வருகின்றமையை மறுப்பதற்கில்லை.அதுமாத்திரமல்லாது எமக்குத் தெரியாத பல தவறான புதிய இலக்கங்களிலிருந்து அலைபேசிகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருகின்ற சந்தர்ப்பங்களில் எம்மில் பலரும் அவற்றின் ஈர்ப்புக்கு உள்ளாகி எம்மைப் பற்றிய முழு விடயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டு  இறுதியில் தேவையற்ற பல பிரச்சினைகளைத் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்டு மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருப்பதையும் கூட இன்று சமூகத்தில் பரவலாகக் காணமுடிகின்றது.இதனால் எமது எதிர்காலம் குறித்தான பல இருள்மயமான பக்கங்களும் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது இவ் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பல பொய்யான செய்திகளும் தகவல்களும் கூட எம்மால் பதிவிட்டு பரப்பப்டுகின்றன.குறித்த செய்திகள் உண்மையா?பொய்யா? என ஆராயாது அவற்றைக் பார்த்த அந்நொடிப்பொழுதே மற்றவர்களுக்கு Share  செய்து விடுகின்றனர்.இதனால் பல மக்களை ஏமாற்றப்படுவதோடு அவற்றின் மூலம் சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான  வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன.
"கேட்டதையெல்லாம் சொல்பவன் அவன் பொய்யன் என்பதற்கு அடையாளமாகும்" (அல்-ஹதீஸ்)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ

 [ அல்-ஹுஜுராத்:06 ]
"முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்".

இதுபோன்றே முகநூல்ப் பாவனையின் ஊடாகவும் கூட பலருடன் பல தீய தொடர்புகளும் புகைப்படப் பகிர்வுகளும் இடம்பெற்று இறுதியில் பலரின் திருமணபந்தங்களும் கூட அறுந்து விடும் நிலைக்கும் கூட இவ் சமூகஊடகங்களில் எம்மில் பலரின்  செயற்பாடுகள் அமைந்திருப்பது கவலைக்குரியதோர் விடயமே!
இதுதவிர பலரின் குறைகளையும் விமர்சனங்களையும் நாகரிகற்ற முறையில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களது மானங்களைப் போக்கும் வகையில் அவர்களது கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளும் கூட இன்று எம்மால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 
"ஓர் அடியானின் குறையை மற்றோர் அடியான் மறைத்தால்  அவனுடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்". (முஸ்லிம்)

மேலும் மின்னஞ்சல்  வாயிலாகவும் கூட பலரையும் அச்சுறுத்தி மின்னஞ்சல்கள் பல அனுப்பப்பட்டு அவர்களைத் தேவையற்ற கவலைகளில் ஈடுபடுத்தும் செயற்பாடுகளும் கூட எம்மால் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இவைகள் குறித்து நாம் ஒவ்வொருவரும்  எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும்.காரணம் எமக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு அருட்கொடைகள் குறித்தும் நாம் விசாரிக்கப்பட இருக்கின்றோம்.

الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

 [ யாஸீன்:65 ]
"அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்".

எனவே இதனடிப்படையில் எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே எமது Whatssapp Status களை இஸ்லாத்தைப் பிறருக்கு எத்தி வைக்கும் அமைப்பில் குர்ஆனிய சிந்தைகள் மற்றும் ஹதீஸ்,பயான்கள் முதலியவற்றைப் பதிவிடுவதற்காகப் பயன்படடுத்தலாம்.இதன் மூலம் நாமும் நன்மையடைவதோடு பிறரும் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகின்றது.

" யார் ஒருவருக்கு நன்மைக்கு வழிகாட்டுகின்றாரோ அவர் அதைச் செய்தவரைப் போன்ற நன்மை கிடைக்கும்" (முஸ்லிம்)

"என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்".
(புகாரி-3461)

அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம் மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு (உயர்ரக) செந்நிற ஒட்டகங்களை விட மேலானதாகும்" (ஸஹீஹுல் புகாரி)

மேலும் இசைகளைத் தவிர்த்து பிறரை ஆர்வம் ஊட்டக்கூடிய உற்சாகமூட்டக்  கூடிய கருத்துக்கள் அடங்கிய  பதிவுகளைப் பதிவிடுவதன் மூலமும் சமூகம் பயனடைந்து கொள்ளும்.
மக்களுக்குப் பயனளிப்பவராக வாழ வேண்டும்.

அதுமட்டுமல்லாது பிறரைச் சிரிக்க வைக்க வேண்டுமென்பதற்காகவும் விளைட்டிற்காகவும் கூடப் பல பொய்யான தகவல்களும் கூட எம்மால் இவ் சமூகவலைத்தளங்டளில் பதிவிடப்பட்டு வருகின்றன.இது பற்றியும் இஸ்லாம் எச்சரிக்கின்றது.

"தான் சத்தியத்தின் மீது இருந்தும், வாதம் புரிவதை விட்டுவிடும் மனிதருக்கு சுவனத்தின் ஓரத்தில் ஒரு மாளிகையை வாங்கித் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.விளையாட்டாகக் கூடப் பொய் பேசுவதை விட்டுவிடும் மனிதருக்கு சொர்க்கத்தின் மத்திய பகுதியில் ஒரு மாளிகையை வாங்கித் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.எவர் தனது குணத்தை அழகாக ஆக்கிக் கொள்கிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு மாளிகையை வாங்கித் தரப் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்" என நபியவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவுத்)

"நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல, அதை அவர் உண்மை என்று நம்புகிறார்.இது மிகப் பெரும் மோசடியாகும்" (அபூதாவுத்)

இன்னும், நாம் பிறர் எம்மைப் புகழ வேண்டுமென்ற நோக்கிலும், பிறரது  திருப்திக்காகவும் பல பதிவுகள் பதிவிட்டு வருகின்றோம்.அப்படியான நிலைகளில் இருந்தும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "எவர் பெருமைக்காகச் செயல்படுவாரோ அல்லாஹ் அவரை (மறுமையில்) இழிவுபடுத்துவான்.எவர் முகஸ்துதிக்காகச் செயல்படுவாரோ (மறுமையில்) அல்லாஹ் அவருடைய அந்தரங்கங்களை வெளிப்படுத்துவான்"(புகாரி,முஸ்லிம்)

இன்னும் சமூக வலைத்தளங்கள் மூலமான எமது தொடர்பாடல்களிலும் கூட அஜ்னபி-மஹ்ரமி வரையறைகளை நாம் பேணிக் கொள்ள வேண்டும்.காரணம் ஓர் ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கும் போது மூன்றாமவனாக ஷைத்தான் இருக்கின்றான் என்பதை நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.எனவே அளவுக்கதிகமான தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்து இஸ்லாம் வழிகாட்டியுள்ள பிரகாரம் எம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

எனவே தொகுத்து நோக்கும் போது மேற்கூறப்பட்டவற்றின் பிரகாரம் சமூகவலைத்தளங்களுடனான எமது பாவனை மற்றும் தொடர்பு எவ்வாறு அமைந்துள்ளது என நாம் அனைவரும் எம்மை ஒருகணம் சுயவிசாரணை செய்து எம் செயற்பாடுகளை சீரமைத்துக் கொண்டு நல்ல நோக்கத்திற்காகவும் ,நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் சாதனமாகவும் அவற்றைப் பயன்படுத்தி, எமது ஈருலக வாழ்விற்குமான பல பயனுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பகிர்ந்து கொள்ளும் ஓர் ஊடகமாகவும் இவ் சமூகவலைத்தளங்களை நாம் பயன்படுத்தி வல்லவன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்று சுவனத்தைச் சென்றடைய அல்லாஹ் எம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக!

எனவே இதுவரை காலமும் நாம் எம்மை  அறிந்தோ அறியாமலோ இவ்வாறான சமூக வலைத்தளங்கள் மூலமான பல்வேறு தவறுகளில் ஈடுபட்டிருப்போம்.இனியும் காலம் தாழ்த்தாது எம்மை தாம் அவற்றிலிருந்து எம்மை விடுவித்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பாச் (பாவமன்னிப்பு) செய்து எம்மை நாம் சீர்திருத்திக் கொள்வோமாக!
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا 
 [ அந்நஸ்ர்:03 ]
"உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்".
"........إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ...." 
(அல்பகரா:222)
 ".....பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.....".