இறைவனுடைய படைப்புக்களில் மிகவும் உயர்ந்த படைப்புதான் மனிதன். தான் படைத்த எல்லாப் படைப்புக்களையும் மனிதனுக்கே வசப்படுத்தி, எல்லாம் அவனுக்காகவே தொண்டு புரியவும், பிரயோசனப்படவும் அமைத்துக் கொடுத்தான் இறைவன். எனவே மனிதன் இறைவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் அது குறைவுதான்! இவ்வளவு உயர்ந்த அந்தஸ்து தரப்பட்ட மனிதன், காலப்போக்கில் இரு வகையாகப் பிரிந்து விடுகிறான். இறைவனால் படைக்கப்பட்ட எதுவொன்றும் இரு வகையாக அமைந்திருப்பதைப் போல் 'உயர்ந்தவன், தாழ்ந்தவன்' என்ற தலைப்பிலே, அவனது வாழ்வும் இரு வகையாகப் பிரிந்து விடுகிறது.
உயர்ந்தவனாக மாற
அவனுக்குப் பலவித சிரமங்கள்- சோதனைகள் குறுக்கே நின்று தடுக்கின்றன. தியாகங்கள் பல செய்யவும் அவன் பின் வாங்குவதில்லை. இறுதியாக நீண்ட காலம் சோதனை, வேதனை அவனை வறுத்தெடுத்த பின், அவன் உயர்ந்த மனிதனாக மாறுகிறான்;மாமேதை ஆகிறான்;மகானாக அழியாப் புகழ்பெற்ற அமரனாகிறான். மனிதன் தாழ்ந்தவனாகப் போவதற்குச் சிரமம்,சோதனை, வேதனை,தியாகம் ஒன்றும் தேவைப்படுவதில்லை.
நொடிப்பொழுதிலே அவன் நீசனாக- குடிகாரனாக விபச்சாரனாக- இன்ன பிற பட்டங்கள் பெற்றவனாக மாறிவிட முடியும். எனவே அவனை உலகம், 'மனித மிருகம்' என வருணித்து விடுகிறது.
மகானாக- மங்காப் புகழுள்ளவனாக மாறுவதற்கு, மனிதனுக்கு மிகவும் கடினமாயிருக்கிறது. எனவே அத்தகையோர் தொகையும் குறைவுதான்! மிருகமாக மாற, மனிதனுக்குப் பல சாதனைகள்- சூழ்நிலைகள்- சந்தர்ப்பங்கள் வெகு எளிதில் கிட்டி விடுகின்றன. எனவே, அத்தகையோர் பெருக்கமும் கணிசமான அளவிலிருக்கிறது. இன்றைய நவீன நாகரீக உலகிலே, மனிதனை மிருகமாக்குவதிலே இதர எல்லா இழி செயல்களையும் விட, நவீன ஊடகங்கள் பிரதான பங்கு வகிக்கின்றன எனலாம். அவை எப்படி மனிதனை மிருகத்திலும் கேடுகெட்ட நிலைமைக்கு இட்டுச் செல்கின்றன என்பதை இனி ஆராய்வோம்..
இன்று நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நூற்றாண்டில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதோடு, இந்த உலகையே உள்ளங்கைக்குள் சுருக்கிக் கொள்ளும் அளவிற்கு அதீத வளர்ச்சியும் கண்டுள்ளது. அந்த வகையில் இந்நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப் படைப்பவையே நவீன ஊடகங்கள் ஆகும்.
சமூகத்திற்கு தொலைதூரத்திலிருந்த ஊடகம் இன்று நம் வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு அடுக்களைக்கும், குளியலறைக்கும் கூட வந்து விட்டது.
"தகவலை அனுப்புபவருக்கும் பெறுபவருக்குமிடையே நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துவது, அத் தொடர்பினை ஏற்படுத்த பயன்படுத்தும் சாதனமே ஊடகம்" எனப்படும். நாம் இன்று எதனை சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்று எமக்கு
உத்தரவிடுவது நவீன ஊடகங்கள் தான்.
நாம் எந்த பற்பசையால் பல் துலக்க வேண்டும்?; எந்த ஷாம்பை தலைக்குப் பூச வேண்டும்?; எந்த சவர்க்காரத்தை உபயோகிக்க வேண்டும்? என்பதையெல்லாம் இந் நவீன ஊடகங்களே தீர்மானிக்கின்றன. எமது விருப்பத்திற்கு மாறாக எமது பாரம்பரிய, சமூக, சமய கலாச்சாரங்களுக்கு மாறாக தமது விருப்பப்படி எம்மை ஆட்டுவிப்பது நவீன ஊடகங்களே. நாம் சிரிப்பதும்,அழுவதும் கோபப்படுவதும் நவீன ஊடகங்கள் சொல்லித் தருகின்ற படிதான். இன்னும் சொல்லப் போனால் நாம் பெற்ற குழந்தைகளை எமக்கு விருப்பமான முறையில் வளர்க்கக் கூட விடுவதில்லை இந் நவீன ஊடகங்கள்.
ஐக்கிய நாடுகள் சபை நடாத்திக் கொண்டிருக்கின்ற ஆட்சிக்கு அப்பால் உலகை ஆட்சி செய்வது நவீன ஊடகங்கள் தான் என்பதனை ஈராக் யுத்தத்திலும் இஸ்ரேலின் திமிரிலும் ஈரானின் மீதான நெருக்குதலிலும்
கண்டு கொண்டுதான் இருக்கின்றோம்.
எப்படியோ நவீன ஊடகங்களானது அவற்றை உருவாக்கியவர்க-ளையே உதறித் தள்ளிவிட்டு, சங்கிலிப் பிணைப்புகக்ளை வெட்டி எறிந்து விட்டு, தட்டிக் கேட்க எவருமில்லை என்ற அடிப்படையில் தறிகெட்டு அலைகின்றன.
இவ்வாறு புதிய கண்டுபிடிப்புக்களாக மலிந்து காணப்படுகின்றவை-களே நவீன ஊடகங்களான சமூக வலைத்தளங்களாகும்.
சமூக வலைத்தளங்கள் இன்றைய உலகில் அதி சக்தி வாய்ந்த சாதனமாகத் திகழ்கின்றன. சமூக வலைத்தளங்கள் என்ற சொல்லுக்குள் புலனம் (WhatsApp),முகநூல் (Facebook), வலையொளி (YouTube), கீச்சகம் (Twitter),IMO, Viber போன்ற இன்னும் பல தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்தவை-களும் காணப்படுகின்றன.
இன்று இவை ஒவ்வொருவரின் கரங்களிலும் இருக்கக்கூடிய மிக முக்கியமானவைகளா-கக் காணப்படுகின்றன. இவற்றினால் அதிகமான நன்மைகள் இருந்தாலும் கூட, இதிலிருந்து எமது முஸ்லிம் சமூகம் அதிகமான தீமைகளையே பெற்றுக் கொள்கின்றது என்பதைக் கூறுவதில் எவ்வித ஐயமுமில்லை. இன்றைய சமூக வலைத்தளங்கள் முஸ்லிம்களின் தனிப்பட்ட, சமூக வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. இலங்கை போன்ற சிறிய தீவிலே, பல்லின சமூகங்கள் சேர்ந்து வாழும் சூழ்நிலையில் முஸ்லிம்கள் மீது அவர்களைத் திசை திருப்பும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகம் என்றே கூறலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு காலம் வரும். அந்தக் காலத்தில் குழப்பங்களும், அநியாயங்களும், அட்டூழியங்களும், பாவச் செயல்களும் அதிகரித்துக் காணப்படும்."(முஸ்லிம்)
மேற்கூறிய நபி மொழியின் நிலைப்பாடு இன்று எமது சமூகத்தில் தலைவிரித்து ஆடுகின்றது.
எம்மைச் சுற்றியுள்ள இவ் வலைத்தளங்கள் எமது மொழியை மாற்றுகின்றன.; ஒழுக்கத்தை சீர்குலைக்கின்றன; ஆண்,பெண் வேற்றுமைகளை இல்லாமல் செய்து விடுகின்றன; வயது வேற்றுமைகளை உடைத்தகர்க்கின்றன; எமது எதிர்கால சந்ததியினரின் சீரியஸ் தன்மையை இல்லாமல் செய்து விடுகின்றன. அதிகமான வீடுகளுக்குச் சென்றால், தாய்-தந்தை, சகோதரன்-சகோதரி என்ற எந்த வித்தியாசமுமின்றி எல்லா அனாச்சாரங்களையும், ஆபாசங்களையும், வக்கிரங்களையும் குடும்பமாக இணைந்து பார்த்துக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம். ரமழான் மாதம் வந்து விட்டால் தொலைக்காட்சிக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைத்து விடும். ஆனால், நாம்
இச் சமூக வலைத்தளங்களுக்கு ஒருபோதும் ஓய்வே கொடுப்பதில்லை. அது
எமது பெருநாட்கள் வந்தாலும் சரியே!
இவ்வாறான சமூக வலைத்தளங்களினால் சிறார்கள் முதல் பெரியோர் அதிலும் குறிப்பாக, எமது இளைஞர் சமுதாயம் வரை இன்று சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.
இன்றைய காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளை வளர்ப்பதற்கு இலகுவானதொரு வழிமுறை என நினைத்துக் கையாளும் முறை தான் WhatsApp,Facebook, YouTube மற்றும் இவை போன்ற இன்னோரன்ன சமூக வலைத்தளங்களில் நேரத்தைக் கழிக்கப் பழக்கி விடுவது.அவை பொழுதுபோக்கிற்கு உதவினாலும், அவை பிள்ளைகளை உடல் மற்றும் உள ரீதியாக கடுமையாகப் பாதிக்கின்றன. இவை எமது இளைய சந்ததியினரின் சிந்தனை செய்யும் ஆற்றலையும் மழுங்கடிக்கச் செய்கின்றன. கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள், அரசியல்வாதிகள் போன்றோரது புகைப்படங்களை சிறார்கள், பெரியோர்களிடம் காட்டி, இவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் உடனடியாகவே குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைக் கூறுவதோடு நின்று விடாமல் அவர்களின் குடும்ப விவகாரங்களையும் கூட, கூறுவார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்களின் குடும்பவியல் பற்றிக் கேட்டால் அதற்கும் கூட யோசிக்க வேண்டிய நிலைதான் இன்று எம் முஸ்லிம் சமூகத்தில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
அது மட்டுமல்ல, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் யார்? என்று கேட்டால் தெரியாது என்பார்கள்; துருக்கிய பிரதமர் அர்துகானை அவர்களுக்குத் தெரிந்திருக்காது;யூசுப் இஸ்லாம் யாரென்று தெரியாது;சமி யூசுபை அவர்கள் கேள்விப்பட்டது கிடையாது.இவ்வாறு எமது வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பிரயோசனமளிக்காத-வர்களைத்தான் நாம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம்; அவசியமானவர்களை தெரியாமல் இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம், இச் சமூக வலைத்தளங்களே! பல மாணவர்களிடம் உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன?; இந்த உலகில் எதனை சாதிக்கப் போகிறீர்கள்?; எதிர்காலத்தில் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டால், எந்தத் தெளிவும் இல்லாமல் தடுமாறுகிறார்கள். பாடசாலைகளில் விசாரித்தால், சிறுவயது மாணவர்களிடம் மிக மோசமான பழக்க வழக்கங்கள் குடிகொண்டு விட்டன என்று ஆசிரியர்கள் அங்கலாய்க்கிறார்கள். இவர்கள் மட்டுமா?! கல்லூரி மாணவர்களும் தான் இந்த மோசமான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகுகிறார்கள்.
இவர்கள் இந்தப் பழக்கங்களை எங்கிருந்து கற்றார்கள்? படிக்கின்ற வயதில் முறையாகப் படித்தால்தான் நாம் வாழ்வில் முன்னேற முடியும்;சாதிக்க முடியும். கற்றவனுக்குத்தான் சென்ற இடமெல்லாம் மரியாதை.
இதே போன்றுதான் இளைஞர்,யுவதிகள் WhatsApp, IMO, YouTube, Viber, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் காணப்படுகின்றனர். இதில் தமது செய்திகளைப் பரிமாறுவதற்கு இலகுவான வலைத்தளம் என்று எண்ணி, சில தரமற்ற வீடியோக்களையும், சினிமாப் பாடல்களையும் தமது ஸ்டேடஸ் (Status) ஆக மற்றவர்கள் பார்க்கப் போடுகின்றார்கள். இவர்களிடம் சிறிதளவு கூட வெட்கமில்லையா?!என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. இதில் மாற்று மத சமூகத்தினருக்கும் எமது சமூகத்தினருக்கும் எந்தவிதமான வேறுபாட்டினையும் காண முடியாமல் போகின்றது. சமூக வலைத்தளங்கள் சொல்வதையெல்லாம் நாம் அவ்வாறே நம்பி விடுகிறோம். அவற்றைத் தீர விசாரித்து அறிந்து கொள்வதற்கு நாம் முயற்சிப்பதுமில்லை. அதற்கேற்பவே நாம் செயற்படுகிறோம். அவை சொல்வதற்கேற்பவே எமது உடையமைப்பும் தலைமுடியும் காணப்படுகின்றன.
இதிலிருந்து சமூக வலைத்தளங்கள் எமக்குள் இன்னொரு கலாச்சாரத்தை திணிக்க முயற்சிக்கின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் பல மோசமான விளையாட்டுக்களையும் இன்றைய எமது சமூகத்தினர் தெரிந்து வைத்திருக்கின்றனர். அவ்விளையாட்டுக்க-ளில் 'ப்ளூவேல், 'பப்ஜி, (PUBG) எனும் விளையாட்டுக்கள் இவற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவ்விளையாட்டுக்களி-னால் எவ்வளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?!
அன்பானவர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள்.. நாம் அணியும் ஆடை எமது கலாச்சாரத்தைச் சார்ந்ததா? நாம் பல வடிவங்களில் எமது தலைமுடிகளை வளர்த்து அலங்கரித்துக் கொண்டிருக்கிறோம். இதனை நாம் எங்கிருந்து கற்றுக் கொண்டோம்? சிலர் தமது கைகளிலும், காதுகளிலும், கழுத்திலும் அணிந்துள்ளவை இஸ்லாம் அனுமதித்தவையா?
தற்கொலை இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதா? நாம் யாரை எல்லாம் எம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்தித்தால் நாம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த சமூக வலைத்தளங்கள் எமக்குத் தெரியாமலேயே எம்மை மாற்றி விடுகின்றன. இன்னும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களை உயர்ந்த நல்லவர்களாகக் காட்டி, அவர்கள் மூலமாகவே புகைத்தல்,மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவறான பழக்கமில்லை என்று சொல்லாமலே பாடம் சொல்லித் தருகின்றன இந்த சமூக வலைத்தளங்கள். மேலும், பல குடும்பங்களில் பிரிவுகள் வருவதற்கும் இவைகளே காரணமாகத் திகழ்கின்றன.
பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் சமூகவலைதளங்கள் ஒன்றும் சமூகத்தின் நலனுக்காக நாட்டின் நலனுக்காக உழைப்பனவல்ல. அவை தெளிவான வியாபாரத்தைச் செய்கின்றன. யாரைக் காட்டினால் அதிகமானோரைப் பார்க்க வைக்க முடியுமோ, கேட்க வைக்க முடியுமோ அவர்களைத்தான் காட்டுவார்கள்;பேச வைப்பார்கள். ஒழுக்கம்,
கட்டுக்கோப்பு, மார்க்கம் கண்ணியம் போன்றனவெல்லாம் சமூக வலைத்தளங்களுக்குப் பிரச்சினைகளே அல்ல. எம் சமூகத்தினர் இவைகளின் ஊடாகவும் இன்று திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர் என்பதைக் கேட்கும் போது எவ்வளவு கேவலமாக இருக்கின்றது தெரியுமா? அறிவியல் வளர்ந்து செல்லும் காலமெல்லாம் மனிதனிடத்தில் அசிங்கங்களும், அனாச்சாரங்களும் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து வந்திருக்கின்றன என்பதற்கு இந்த சமூக வலைத்தளங்கள் (என்ற விடயம்) ஓர் எடுத்துக்காட்டாகும்.
இன்று நடைமுறையிலுள்ள நவீன ஊடகக் கலாசாரம் பற்றி தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பலதரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவைகள் மனிதனை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்-றன என்ற குற்றச்சாட்டுக்களும் பரவலாக எழுப்பப்படுகின்றன. சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் இந் நவீன ஊடகங்களை எவ்வாறு ஒரு வழிக்குக் கொண்டு வரலாம், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கின்றன. சட்டதிட்டங்கள், உச்சவரம்புகள், ஒழுக்கக் கோவைகள் என்று போட்டி போட்டுக்கொண்டு எழுதுவதும் கிழிப்பது-மாக,திருத்துவதும் புதுப்பிப்பதுமாக இருக்கின்றன. ஆனால், இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே இப்போது நடக்கின்ற விபரீதங்களை மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் நடக்கப்போகின்ற விபரீதங்களையும் இனங்கண்டு, சிறந்த முறையில், பொருத்தமான வகையில் உரிய ஊடக செல் நெறியை முன்கூட்டியே வகுத்துத் தந்து விட்டது.
நாம் அரசியலில் மட்டுமல்ல, நவீன ஊடகங்களிலும் கூட இன்று அநாதைகளாக்கப்பட்டு-ள்ளோம். அல்லாஹ்வும், முஹம்மத் (ஸல்) அவர்களும் எமக்குக் காட்டித் தந்த (நவீன) ஊடகக் கலாசாரத்தைத் தொலைத்து விட்டு இருளில் அலைந்து கொண்டிருக்கிறோம். இவற்றுக்கு நபிகளாரின் முன்மாதிரி என்ற விடயம் ஆச்சரியமாக நோக்கப்படலாம். ஆனால்,பொதுவாக உலக மாந்தர் அனைவருக்கும் அன்னாரிடம் முன்மாதிரி இருக்கிறது என்றே அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. "(உங்களில்) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது." (33:21)
முன்மாதிரி எனப்படுவதால் அன்னாரைப் பின்பற்றலாம் விரும்பாவிடின் உதாசீனம் செய்யலாம் என்பது அர்த்தமல்ல. மாறாக, கட்டாயம் அன்னார் தந்த போதனைகள் அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே (நவீன) ஊடகத்துறை தொடர்பாக வந்துள்ள அல்குர்ஆன், அல்ஹதீஸ் வசனங்கள் மூலம் கிடைக்கும் உண்மையாகும்.
அன்பானவர்களே! நீங்கள் பார்க்கும் படங்கள்,கேட்கும் பாடல்கள் மற்றும் இன்னோரன்ன செயற்பாடுகள் உங்களை எந்தளவு ஆரோக்கியமாக சிந்திக்க வைக்கின்றன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.. அவை நீங்கள் அறியாமலேயே உங்களிடம் எந்தளவு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன என்பதை நிதானமாக யோசியுங்கள்.. "(அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் உள்ளங்கள் இருளாகிப் போனவர்களுக்குக் கேடுதான்;நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கின்றனர்." (39:22)
உங்களது ஒழுக்கம், கல்வி போன்றவற்றில் அவை பாரிய தாக்கங்களை விளைவிக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எமது
சமுதாயத்தை அழிப்பதற்கு,எமது சமுதாயத்தை அப்படியே ஈசல்கள் போன்று சிதறடிப்பதற்கு நாங்களே உறுதுணையாக இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நவீன ஊடகங்களினால் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்பதை எண்ணில் எடுக்க முடியுமோ! நிச்சயமாக
இந் நவீன ஊடகங்களினால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது முஸ்லிம் சமூகம் என்பதை ஆணித்தரமாக கூறுகின்றேன்.
"ஒவ்வோர் ஆத்மாவும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப்பட்டதா-கும்." (74:38) என்ற
வசனத்திற்கேற்ப ஒவ்வொருவரும் நன்மையான நடவடிக்கைகளை இந்த விடயத்தில் மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொருவரும் இதனைச் சிந்தித்து உணராத வரையில் கட்டுரைகளாலும், பயான் (பேருரை) களா-லும் திருத்துவது கடினமாகி விடும். தான்
செலவழிக்கும் ஒவ்வொரு வினாடிக்கு-மான கேள்வி கணக்கு மறுமையில் இருக்கின்றது என்பதை நாம் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடி முகத்தைக் காட்டுவது போல், நவீன ஊடகங்களே சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன.
ஒவ்வொரு ஊருக்கும் மௌலவிமார்களையும், ஹாபிழ்களையும்,
வைத்தியர்களையும் மற்றும் ஏனைய துறை சார்ந்தவர்களையும் உருவாக்குவது அவ்வூர்ச் சமூகத்திற்கு பர்ளு கிபாயாவாகின்றது. அதேபோல் எமது முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எமக்கான பிரத்தியேக நவீன ஊடகங்களை உருவாக்குவதும் 'பர்ளு கிபாயா' ஆகும்.
நாம் இவ்வுலகிற்கு அல்லாஹ்வின் பிரதிநிதியாக வந்தோம். ஆனால், நாம்
இன்று எங்கே செல்கின்றோம்? எமக்குப் பின்னால் வரும் சந்ததியினரை எதன் பால் வழிகாட்டுகிறோம்? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.உங்கள் சந்ததியினரின் வாழ்க்கைக்கு நீங்களே அநியாயம் இழைத்தவர்களாக மாறி விடாதீர்கள். ஏனெனில்,நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புள்ளது;அந்தப் பொறுப்பைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்!" (புகாரி) என்ற நபி மொழிக்கேற்ப நீங்களும் உங்கள் சந்ததியினர் பற்றி நாளை விசாரிக்கப்ப-டுவீர்கள் என்பது உறுதி.எனவே, மறுமையின் நினைவினை மனதில் நிறுத்தி கொள்வதன் மூலமாகவும், சுவர்க்கம், நரகம், கப்று வாழ்க்கை என்பவற்றை சிந்திப்பதனூடாகவும் நாம் இந்நவீன ஊடகங்களின் தவறான செயற்பாடுகள், பாவனைக்களை தவிர்த்துக் கொள்ளலாம்.மேலும், இவ்வாறான தவறான பயன்பாடுகளிலிருந்து மீண்டு 21ஆம் நூற்றாண்டின் ஆயுதம் என்று கூறப்படுகின்ற நவீன ஊடகங்களை முஸ்லிம் சமூகத்தை வளர்த்தெடுக்கும் கருவியாகப் பயன்படுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
"எந்தவொரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதிலை." (13:11)
Jawahir Fathima Jesmin,
New Salambaikkulam,
Mannar Road,
Pambai Madu,
Vavuniya.
Register No: 059
0 Comments