உலகம் விழித்துக் கொண்டிருக்கின்ற போது நாம் மட்டும் உறங்கிக் கொண்டிருக்கக் கூடாது. இன்று மிக வேகமாக வளர்ந்து வருகின்ற சமூக வலைதளங்கள் உலகின் எல்லா வாசல்களையும் திறந்து வைத்துள்ளது. முன்னைய காலத்தில் மனிதனின் மூளைக்குள் அகப்பட மறுத்த பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்துக்கொண்டு இருக்கின்றது என்றால் மிகையாகாது. அவ்வாறான இக்காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் சிறியவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி அனைவரினதும் பயன்பாடுகள் எல்லை இல்லாதவை.
இன்றைய மாணவர் சமூகம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு பல அறிவு சார் விடயங்களை அறிந்து கொள்வதற்கு சமூகவலைத்தளங்கள் பல பங்களிப்புகள் ஆற்றி வருகின்றன. "எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர்" என்ற கவிஞரின் கனவை நனவாக்குவது போல் சமூக வலைதளங்கள் உலகில் எந்த மூலைமுடுக்குகளில் இருந்தாலும் தகவல்களை அனுப்பவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுவதோடு, தமது வினாக்களுக்கு விடை அளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் விளங்குகின்றன. இன்று வல்லரசுகளைக் கூட ஆட்டிப்படைக்கின்ற கொரோனா தொற்றுநோய் மூலம் பல்வேறு துறைகளும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட மாணவர்களுக்கு நிகழ்நிலை கல்வியானது பெரும் உறுதுணையாக காணப்படுகின்றது. வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளையும் சமூகவலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ள ஏதுவாகின்றது.
மனிதர்களின் நாளாந்த வாழ்க்கைக்கும் சமூக ஊடகங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் தொடர்ந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. சமூக வலைத்தளங்கள் ஒருவருடைய கருத்துக்களை அவரது கோணத்தில், அவரது பார்வையில் தேவையான விளக்கத்துடன் பதிவு செய்வதிலும் முன்னிலையில் இருக்கின்றது. உலகின் எந்த மூலையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் அதற்கு ஏற்ற பாராட்டுக்களுடனும், எதிர்ப்புகளுடனும் விமர்சனங்கள் உடனடியாக வெளியிடப்படுகின்றன. இவ்வாறு இதனூடாக செய்திப் பரிமாற்றங்கள் அதிக அளவில் இடம் பெறுவதனால் மக்கள் ஊடகமாகவும் சமூக வலைத்தளங்கள் காணப்படுகின்றன. வெட்டி அரட்டை மற்றும் அல்லாது சிறுவர்களுக்கான கார்ட்டூன், விளையாட்டுகள், பாடல்கள் என்றும், இல்லத்தரசிகளுக்கு சமையல்க்கலைகள், உடை அலங்காரங்கள் என்றும், பெரியோர்களுக்கு அரசியல், தொழில்நுட்பம், வணிகக்கல்வி என்றும் அறிவுசார் பொழுதுபோக்கு ஊடகங்கள் ஆகவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பாவிக்காமல் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் விடயங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் பலரும் உள அழுத்தங்களுக்கு ஆளாகி வருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் "சமூக வலைத்தளங்கள் இன்றைய மாணவர் சமூகத்தை ஊனமாக்குகின்றதா?" என சமூக சிந்தனையாளர்களும், ஆர்வலர்களும் உலகத்தைப் பார்த்து கேள்வி கேட்கின்றார்கள். உலகில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கின்ற அதேவேளை, இதில் இளைஞர்களும் மாணவர்களுமே ஏராளமானோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வலைத்தளங்களே கதியெனக் கிடப்பதால் ஆரோக்கியமின்மை, புற்றுநோய், கண் பார்வைக் குறைபாடு, உயர் குருதி அமுக்கம், நீரிழிவு, மன உளைச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாவதோடு, ஞாபக சக்தி, நுண்ணறிவு திறன் என்பனவும் பாதிக்கப்படுகின்றன எனவும், இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படாத கண் விழிவெண்படலம் உலர்தல் நோய் ஏற்படும் வீதம் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளதாகவும் ஒரு அதிர்ச்சி ஆய்வுத் தகவல் அண்மையில் வெளிவந்துள்ளது. இதனால் தான் "கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்" என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது என்றனர் சான்றோர்.
மனிதர்களை ஒன்று சேர்க்க வல்ல மாபெரும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் பங்காற்றுகின்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் தொழில் நோக்கமாகவும், அறிவுசார் நோக்கங்களுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் என பொறுப்புடன் எழுதுவதாக காட்டிக் கொள்ளும் பிரபலங்கள் பலர் வாசிப்போருக்கு நன்மை பயக்கும் வகையில் மட்டும் எழுதாமல் பணம் சேர்க்கும் தனி மனித சுயவிருப்பங்களையும், தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பிற மனிதர்களுக்கு திணிக்கும் நோக்கத்துடனேயே எழுதுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான இலட்சக்கணக்கான கருத்துக்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் தரம் பிரித்து சரி பிழைகளை தேர்ந்து அறிந்துகொள்ளும் விழிப்புணர்வு சாதாரண மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு சாதகமாகும் என்பது கேள்விக்குறியாகும். போலிகளையும், பக்கச்சார்புகளையும், பொறுப்பற்ற பகிர்வுகளையும் உள்வாங்காமல் தனக்கு உகந்தவை எவை? உதவாதவை எவை? என்பதை ஆராய்ந்து அறிவைப் பெற்றுக் கொள்ளவும், சிந்தனை வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும், தமது வாழ்வில் சிறிதளவேனும் உயர் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தல் இன்றியமையாததாகும்.
சமூக வலைதளங்கள் மக்களின் பொன்னான நேரத்தை திருடிக் கொள்வது மட்டுமன்றி மக்களின் உணர்வுகளையும் பிணைப்புகளையும் கொன்று வருகின்றது என்பது மனதை உருக்கக் கூடியதாக அமைகின்றது. "சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியினால் அமெரிக்கா பக்கத்து வீடானது; பக்கத்து வீடு அமெரிக்காவானது" என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது. சுப நிகழ்வுகளுக்கு தேடிச் சென்று வாழ்த்து கூறியும், அழைப்பு அட்டைகளை கையில் கொடுத்துக் கும்பிட்டு விருந்துக்கு அழைத்தும், பரிசுப் பொதிகளுடன் சுகம் விசாரிக்க சென்றும், மூலிகை கட்டுக்களுடனும், விதம் விதமான கஞ்சி பாத்திரங்களுடனும் நோய்கள் விசாரிக்கச் சென்றும் வாழ்ந்த மக்களின் மனிதாபிமானம் மாறி இறந்த வீட்டுக்குச் சென்று இரங்கல் கூட சொல்ல முடியாமல் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் செய்திகளை பதிவு செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கும் அளவிற்கு சமூக வலைதளங்களின் ஆதிக்கம் எம்மை ஆட்டி வைக்கின்றது.
உலக மாற்றத்திற்கு ஏற்ப மாறி வரும் மனிதர்களின் மத்தியில் சமூக வலைதளங்களின் தாக்கம் அவ்வப்போது தமது சாதக பாதக விளைவுகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இவற்றை பயன்படுத்தும் நாம் சமூகப் பாதுகாப்பையும் சுய பாதுகாப்பையும் தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும். எமது விலைமதிக்க முடியாத நேரங்களை சமூக வலைத்தளங்களில் கணக்கின்றி செலவழிக்காமல் இன்றைய சமூகம் சிறந்த சுகதேகிகளாக வாழ்வதற்காக அவர்கள் மைதான விளையாட்டுகளில் ஈடுபடுதல், புத்தகங்கள் வாசித்தல், இயற்கையை ரசித்தல், தாத்தா-பாட்டியுடன் உறவாடுதல், அவர்களின் பழங்கதைகளைக் கேட்டு இரசித்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இதனால் சமூக வலைத்தளங்களுக்கு அடிமைகளாகி சிக்கித்தவிக்கும் இளைஞர்களின் மனநிலை மற்றும் உடற்கூறுகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டுவதாக நரம்பியல் வல்லுனர்களால் உறுதி செய்யப்பட்டு கூறும் பாதகங்களில் இருந்து இளைய சமூகத்தை பாதுகாக்க முடியும்.
எவ்வாறாயினும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல சமூக வலைத்தளங்களிலும் பல தீமைகள் இருந்தாலும் மறுக்க முடியாத ஏராளமான நன்மைகளும் உண்டு என்பதும், ஒட்டுமொத்தமாக சகல மக்கள் மத்தியிலும் இதன் ஆதிக்கம் மிக வேகமாக பரவி வருகின்றமையும் உண்மையே. நடந்துபோய் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற முடியாது என்பது போல் சமூக வலைத்தளங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு முன்னேற்றப்பாதையில் செல்வதும் முடியாத ஒன்றாகும். எனவே நீர் கலந்த பாலில் இருந்து கலந்திருக்கும் நீரை விட்டு பாலை மட்டும் எவ்வாறு அன்னம் பிரித்தெடுக்குமோ, அது போல நாமும் சமூக வலைத்தளங்களின் சாதனை பக்கத்தை மாத்திரம் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பயனை பெற்றுக் கொள்ள முடியும்.
"சமூக வலைத்தளங்களை
சிறப்பாய் பயன்படுத்துவோம்
சிறந்த எதிர்காலத்தை
உருவாக்குவோம்"
M.N.F NALEERA
MALWANA
Reg.No - 061
0 Comments