தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் சமூக வலைத் தளங்கள் முழு உலகையும் தன்னுள் அடக்கியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். தொடர்பாடல் துறையில் ஏற்பட்ட அபரிமித வளர்ச்சியில்  ஓரங்கமாகவே சமூக வலைத்தளப் பாவனை மேலோங்கி உள்ளது. சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை உலகில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் சமூக வலைத்தளங்களின் பாவனை காணப்படுகின்றது.

சமூக வலைத்தளம் (Social net working site) என்பது ஒத்த கருத்துடையோரின் சமூகத்தை வளர்க்கவும் அவர்களிடையே உள்ள சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்தவும்  வழி செய்கின்ற ஓர் இணையச் சேவை அல்லது  வலைத்தளம் என்று பொதுவாக வரையரை செய்யலாம்.

மனிதனின் ரசனை சார்ந்த விடயங்களின் மீதான அறிவையும்,  ஈடுபாட்டையும் அதிகப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படைக் கூறுகளைக் கொண்டே சமூகவலைத் தளங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு சமூக வலைத்தளமும் அதற்கான தனித்துவமான சிறப்பம்சங்கள் மூலம் மனிதனிடம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில்   அவற்றுக்கான இருப்பைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறன.

சம காலத்தில் தவிர்க்க முடியாத இன்னொரு பிரமாண்ட உலகமே சமூக வலைத்தளங்கள். காலை முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நிகழ் உலகம் இந்த வலைத்தள உலகிற்குள் தான் உலாவிக் கொண்டிருக்கின்றது.
விளக்கெரியும் குடிசையில் வாழும் குடிமகனும் கையில் ஸ்மார்ட் போனுடன் இணையம் வழியே முழு உலகையும்  சுற்றி வரும் அளவிற்கு வளர்ந்துள்ளது வலைத்தளங்கள்.

இந்த சமூகவலைத் தளங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் பல எழுச்சிகளையும், பல வீழ்ச்சிகளையும் தன்னகத்தே கொண்டு உலா வருகின்றது. 

 நாளொன்றுக்கு ஒருவர் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலான நேரத்தை face book,  whats'up, Viber, IMO,  Skype, Line, Instagram, Twitter, Google, Messenger போன்ற பல வடிவிலான சமூகவலைத் தளங்களுடன் செலவிடுகின்றார்.
இவ்வாறு அனைத்து இதயங்களையும் தொட்டிருக்கின்ற சமூக வலைத்தளங்கள் ஒரு ரூபாய் நாணயத்தைப் போல நன்மை, தீமை என இரண்டு பக்கங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. எனவே நாம் அவற்றை பிரித்தறிந்து அணுகுவதே அவசியமானது.

சமூக வலைத்தளங்கள் ஒவ்வொன்றும் மனித உளவியளில் தாக்கத்தை ஏற்படுத்தி மனிதனைத் தான்பால் ஈர்த்துக்கொள்ளக்  கூடியவையாக அமைந்திருக்கின்றன.  இன்றைய சந்ததியினர் அனைத்து தேவைகளுக்கும் சமூக வலைத்தளங்களை அணுகிப் பழகிவிட்ட படியால், அந்த ஈர்ப்பிலிருந்து விடுபடுவது அனைவருக்கும் மலைப்பான காரியமாகவே தோன்றுகிறது. இருப்பினும் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களின்  பயன்பாட்டுக்கான அளவுகோள் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

சமூக வலைத் தளங்கள் பெரும்பாலான மற்ற துறைகளுக்கு தகவல் வங்கிகளாகச் செயல்படுகின்றன. இன்று பல துறைகளின் போக்குகளைச் சமூகவலைத் தளங்களே தீர்மானிக்கின்றன. அத்தோடு உலகின் பல்வேறு மூலைகளில் ஆங்காங்கு வாழும் தனி மனிதர்களை ஓர் சமூகமாக ஒன்றிணைக்கும் செயற்பாட்டையும் இவ் வலைத்தளங்களே மேற்கொள்கின்றன. மேலும் இவை இன்று மக்களுக்கு தகவல் மற்றும் செய்திகளை உடனுக்குடன் எடுத்துச் செல்லும் பிரதான ஊடகமாக தொழிற்படுவதோடு நிகழ்கால உலகின் தேவைகளை எளிதாக மாற்றக்கூடிய சக்தி கொண்டதாகவும் திகழ்கின்றது. 

இணைய கலாசாரத்திற்கு ஏற்ப இசை வாக்கமடைந்துள்ள இன்றைய தலைமுறையில் அனைவரும் தத்தமது சுயகருத்துக்களை, அபிப்பிராயங்களைத் தெரிவித்து, அதை பிறருக்கும் கொண்டு செல்ல சமூகவலைத்தளங்களே  துணை புரிகின்றன. மேலும் வலைத்தளங்கள்  பல்வேறு தகவல்களை ஆராயவும், பரிமாறவும்,புதிய தகவல்களை பெறவும்,  அறிவை பெருக்கிக் கொள்ளவும் வழி செய்கின்றன. 

அதே சமயம் சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் கருத்துக்களை வெளியிடலாம். ஆகையால் அனைத்தும் உண்மையான தகவலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால் சிந்தித்து அவதானமாக சமூக வலைத்தளங்களை கையாள்வதே ஆரோக்கியமான விடயமாகும்.

இவ்வாறு பல்வேறுபட்ட வகையில் சமூக வலை தளங்களானது எமக்கு பயன்படும் அதே சமயம்,  இவற்றால் ஏற்படும் பாதகங்களுக்கும் பஞ்சமே இல்லை. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் " என்பதை போல மிதமிஞ்சிய சமூக வலைத்தளப் பாவனையானது பல்வேறு சீரழிவுகளையும் பாதிப்புக்களையும் கொண்டுவரவல்லது, என்றால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்கள் இன்றைய 
சந்ததியினரை தன் வயப்படுத்தி அவர்களின் நேரத்தை ஆக்கிரமித்து முக்கியமான விடயங்களை பிற்படுத்தவும் மறக்கவும் செய்து வருகின்றது.  குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படையக் கூடிய துர்பாக்கிய நிலை தற்போது உருவாகியுள்ளது. கல்வி தொடர்பான  ஏராளமான தகவல்கள் வலைத்தளங்களில் நிரம்பியுள்ள போதும் மாணவர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவது இல்லை. மாறாக,  இணைய வழி விளையாட்டுக்களில் மணித்தியாலக் கணக்கில் தன்னை மறந்து மூழ்கிப் போய் கிடக்கும் நிலை, தகாத நட்பு வட்டாரங்கள், பருவ வயதை மீறிய பழக்க வழக்கங்கள் என்பவையே பெருமளவில் இடம்பெறுகின்றது.

இயல்பாகவே எவரும் தன்னுடைய நேரத்தை விரயம் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால் நேரம் குறித்து மிகுந்த கவனம் உள்ளவர்கள் கூட  சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மட்டும் காலம் விரயமாவதை உணராமல் தொடர்ந்து அதில் புழங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதிக நேரம் கணினி, அலைபேசி என்பவற்றை உற்று நோக்குவதால் கண் சார்ந்த பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. 

சமூக வலைத்தளங்களின் எழுச்சி பல பாரம்பரிய பொழுது போக்குகளைக் கூட  அழித்து விட்டதாகத்தான் தோன்றுகின்றது.
பெரும்பாலானோர் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை பயனுள்ள மற்ற பொழுது போக்குகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் செலவிடாமல்  சமூக வலைத் தளங்களிலே செலவிடுகின்றனர். அதாவது குடும்ப அழகு இன்று சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள நிலமையை பரவலாக காண முடிகின்றது. பிரச்சினைகள், கவலைகள், மனதை உருக்கும் சம்பவங்கள் நிகழும் போது, அதைப் பற்றி குடும்ப அங்கத்தவர்களிடம் அமர்ந்து பேசக்கூடிய நிலை மாறி, சமூக வலைத்தளங்களில் தமது உணர்வலைகளைப்  பறக்க விட்டு ஆறுதல் பெற  முற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

எண்ணமும் உணர்வும் யதார்த்தம் இல்லாத போது நடத்தையானது  ஒழுங்கற்றதாகவும் சீரற்றதாகவும் மாறுகின்றது. அந்த வகையில் அதிக சமூகவலைத்தள பாவனையானது இளைய தலைமுறையினரை  ஊனமாக்கிக்  கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதனால் பொருளாதார வறுமை போன்றே ஆன்மீக வறுமைக்கும் இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

சமீபத்தில் "சோஷியல் மீடியா டோபமைன் " என்னும் வழக்காறு பிரபலமாகி வருகின்றது. மனித மூளையில் இயற்கையாகவே உற்பத்தியாகும் ஒரு போதை வஸ்த்து தான் டோபமைன் (Dopamine). இதுவே மனிதன் அடிமையாக இருக்கும் அத்தனை பழக்க வழக்கங்களுக்கும் ஆதிமூலம். மனிதனின் தனிப்பட்ட விருப்பமாகக்  கருதப்படும் அனைத்தும் மனித மூளையில் உற்பத்தியாகும் டோபமைனால் உந்தப்படுபவையே. தன்னைப் பற்றியும், தான் சார்ந்த விடயங்களையும் அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு மனிதனுக்கு என்றும் குறைவதே கிடையாது. இதுவும் ஒரு வகையில் டோபமைனால் தூண்டப்படும் விருப்பம் தான். இதன் காரணமாகவே
இன்றைய தலைமுறையினர் தன்னைப் பற்றிய விடயங்களை அதிகம் பகிரக் கூடிய பேஸ்புக்
(Face book), வாட்ஸ் அப்(whatsapp), டிவிட்டர்(Twitter), இன்ஸ்டாகிராம்  (Instagram) மற்றும் யூடியூப் (youtube)  போன்ற சமூகவலைத்தளங்களோடு  பிண்ணிப் பிணைந்துள்ளனர்.

சீத்தலைச் சாத்தனார் ஓர் அஷ்டவதானி என்றும் அவர் ஒரே நேரத்தில் எட்டுப்  பேரின் கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு  பதில் அளிக்கக்கூடியவர் என்றும் கேள்விப்
பட்டிருப்போம். இதனையே "மல்டிடாஸ்கிங்" (multi tasking) என்று அழைக்கின்றனர். அத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த ஒரு சிலரை இப்போதும் உலகம் பிரமிப்போடு தான் பார்த்து வருகின்றது. இன்று சமூக வலைத்  தளங்கள் நம்மில் பலரையும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடியவர்களாக மாற்றி விட்டது. ஆனால் இந்த மாற்றம் ஆக்கபூர்வமான வகையில் மனிதனை மாற்றியதாகவோ அல்லது மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவோ தென்படவில்லை. அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது, படிக்கும் போது, சமையல் செய்யும் போது, ஏன் இரவு உறக்கத்தில் விழிக்கும் போது கூட சமூக வலைத்  தளங்களின் நோட்டிபிகேஷனைப் பார்ப்பது இன்று இயல்பானதாகி விட்டது. இதனால் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் எதிர்மறை விளைவுகளே அதிகமாகி வருகின்றன.

ஒட்டுமொத்தமாகக் கூறப்போனால், சமூக வலைத்தளங்கள் சாதகமா? அல்லது பாதகமா? என்று பார்த்தால், அது நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் அமைந்துள்ளது.
எனவே நாம் அனைவரும் இந்த சமூகவலைத் தளங்களை தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் தீங்கை ஏற்படுத்தாதவாறு மிகச் சரியான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிரதிபலனான ஆக்கமும், அழிவும் எமது கைகளிலே  தங்கியிருக்கின்றது.

B.f.Husna
Anuradhapura
Reg no-50