Zainab Risvi - Puttalam 

கதீஜாவும் அவளது கணவன்  நலீபும் தம்  அன்பு மகனின் நிலைப்பற்றி நினைத்து, பேச்சிளந்து நாவடைத்து வைத்தியசாலை நாட்காலியில் உறைந்து போய் அமர்ந்திருந்தனர்.
                          யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு நிமிர்ந்த நலீப், டாக்டரை அப்போது தான் கவனித்தார்.தன் நிலையை சுதாகரித்துக்கொண்டு,

"டாக்டர்.....டாக்டர் என் மகனுக்கு ஒன்னுமில்லல.....பிளீஸ் டாக்டர்....சொல்லுங்க டாக்டர்.....எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல.....குணப்படுத்திடலாம்ல....சொல்லுங்க டாக்டர்.." என்று பரபரத்துக்கொண்டிருந்தார் நலீப்.

" ரிலேக்ஸ்.....முதல்ல உங்கள நிதானப்படுத்திக்கோங்க.உங்க மகன்ட நிலை ரொம்ப மோசமா தான் இருக்கு.எங்களால முடிஞ்சத முயற்சிக்கிறோம்.இனி எல்லாம் கடவுள்ட தான் இருக்கு.கடவுள்கிட்ட  வேண்டிக்கோங்க.இன்னுமொரு டெஸ்ட் முடிந்ததும் பார்த்துக்கலாம்" என டாக்டர் சிகிச்சை அறையை நோக்கி விரைந்தார்.
                    மர்யமின் கணவரோ,டாக்டர் பேசி முடிப்பதற்குள் தலையில் கையை அடித்துக்கொண்டு    தான் ஓர் ஆண் மகன் என்பதையும் மறந்து குலுங்கி குலுங்கி அழுதார்.

**************************
குட்டி குடிசையில் தாயை ஒன்றி பிள்ளையும் தன் பிஞ்சுக்கரங்களை ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு தாயின் மடியிலே தலை சாய்த்து,
              "உம்மா...பசிக்குதுமா...ராத்திரியும் பசில தூங்கினேன்.விடிஞ்சதும் ஏதாவது வாங்கித்தாரேன்னு தானேம்மா சொல்லி தூங்கவெச்சிங்க " என்று ஆயிஷாவின் அன்பு மகன் தன் பசியை உணர்த்தினான்.
                         ஆயிஷாவிற்கோ மகன் ஆயிஷ் பசியால் தவிப்பது மனதை பெரிதும் வாட்டியது.
                 " கணவன் இருந்திருந்தால் இவ்வாறு பசியால்வாட விட்டிருப்பாரா?எங்காவது சென்று உண்ண ஏதாவது கொடுத்திருப்பாரே! " என மனம் எண்ணியது.
                             உடனே,கணவனின் ஞாபகங்கள் மனதை எட்டிப்பார்த்தன.தொண்டை அடைத்தது.நாக்கு பேச்செல மறுத்தது.கண்கள் இருண்டன.ஒரு நிமிடம் கண்களை மூடி அமைதியானாள்.அவளது கணவன் 3 மாதங்களுக்கு முன் சென்ற இறுதி சந்திப்பு மீண்டும் மனக்கண்னில் தோற்றமளித்தன.
                             
அன்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 எனும் கொடிய நோயான கொரோணா வைரஸ், உலகம் முழுவதையும் அதிகாரம் இன்றி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தருணம்.வீட்டிலோ உணவுப்பண்டங்கள் எல்லாம் தீர்ந்துக்கொண்டிருந்தது.
                                       "இனியும் வீட்டிலே நோயிற்கு பயந்து முடங்கிக்கொண்டிருந்தால் வயிற்றுப்பசிக்கு என்ன செய்வது?இன்னும் ஒரு வாரத்தில் ஊரடங்குச்சட்டம் போட்டு விடுவார்கள்.பின்னர், மூவரும் பட்டினியால் வாடிவதங்கி கொண்டு விதியை நோவதைவிட ஏதாவது முயற்சி செய்து பார்ப்போமே! " என்று வீட்டுத்தலைவன், மனைவி மற்றும் பிள்ளையிடம் விடைப்பெற்றுக்கொண்டு வழமையாக வேலை பார்க்கும் இடமான கொழும்பிற்கு சென்றார்.
              
சென்று இரண்டு வாரங்கள் கடந்த பின்னும் கணவர் அன்வரைப்பற்றிய எந்த தகவலும் மனைவிக்கு கிடைக்கவில்லை.வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வீட்டில் இருந்தவற்றை வைத்து உணவிற்கு ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தாள்.
         மூன்றாம் வாரம் வானொலியில் ஒலிப்பரப்பிக் கொண்டிருக்கும் செய்தியை கேட்டுக்கொண்டிருக்கையில்,
      " கிராமப்புரத்தில் இருந்து நகரத்திற்கு பேரூந்தில் பயணம் செய்த பயணிகளை எழுமாறாக பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்தியபோது மூவருக்கு கொரோணா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.அதில் 32 வயதான அன்வர் எனும் நபர் நேற்று காலை உயிரிழந்தார்.அவருடைய தேசிய அடையாள அட்டையின் மூலமே அடையாளம் தெரியப்பட்டிருந்தாலும் உறவினர்களுடைய விபரம் எதுவும் கண்டறியப்படவில்லை.எனவே இன்று காலை அரசாங்கத்தின் உத்தரவுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது."
                          என்றதை கேட்டவுடன் ஆயிஷா பேரதிர்ச்சி அடைந்தாள்.மனதில் பூகம்பமே இடிந்து விழுந்தது போல் ஓர் உணர்வு.
            இன்றும் துக்கம் தொண்டையை அடைத்தது.கண்கள் கசிந்தன.அப்படியே கணவனின் நினைவில்,
                                    "சே..போகவிடாமல் தடுத்திருக்கலாம்.எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.பெண்புத்தி பின்புத்தியாச்சே" என தன்னையே நொந்துக்கொண்டாள்.

" உம்மா...ஏம்மா அழுரிங்க.அழுதிங்கமா ...எனக்கு பசிக்கல , நா உங்கள கஷ்டப்படுத்தல அழாதிங்கமா..." என்று மகன் தன் தாய்க்காக பசியைக் கட்டுப்படுத்தி, கூறிக்கொண்டிருந்தான்.
                                       மகனின் பேச்சினால் சுயநினைவுக்கு வந்த ஆயிஷா, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,
" உம்மா அதற்காக அழல்லடா ராஜா" என தன் மனதை கட்டுப்படுத்தி மீண்டும்,
             " இப்போ ஊரடங்குச்சட்டம் போட்டிருக்கிறதால வெளிய போக முடியாது செல்லம்.ஹாஜியார் வீட்டயும் யாரும் இல்ல.ஆகிப் தம்பிக்கு மூச்சடைக்குதுன்டு ஹாஸ்பிடல் போய் இருக்காங்க. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுமா.." என்று நிலமையை கூறி மகனை ஆறுதல் படுத்தினாள்.

**************************

" என்னங்க இது, ஹாஸ்பிடல் வந்து நாலுவாரமும் முடியப்போகுது.மகனபத்தி எந்த தகவலும் தாராங்க இல்ல. பார்க்கவும் அனுமதில்ல. சும்மா டெஸ்டு டெஸ்டுன்னு அலைக்கழிக்கிறாங்க.என் புள்ளய என்னபாடு படுத்துராங்களோ! நாட்டு நெலமவேற  ரொம்ப மோசமாயிருக்கு..." என்று கதீஜா கணவனிடம் எரிந்து விழுந்துக்கொண்டிருந்தாள்.
    அவ்வேளை " நீங்கள் தானே ஆகிபின் பெற்றோர். உங்களை பெரிய டாக்டர் அழைத்தார்" என தாதி தகவல் கொடுத்தார்.
                                 இருவரும் " எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும்" என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு டாக்டரின் அறைக்கு விரைந்தனர்.
                     அனுமதி வேண்டி வெளியே நின்ற இருவரையும் உள்ளே அழைத்த டாக்டர் பேசத்தொடங்கினார்.
" நீங்கள் இருவரும் முதலில் உங்கள் மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுடைய மகன் 2ம் நாள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோணா தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டார்."  என கூறும்போதே கதீஜா நெஞ்சை அழுத்திப்பிடித்து கொண்டிருந்தாள்.
                             "கொஞ்சம் நிதானமாக கேளுங்கள் " என மேலே பேசினார்.
                 " பின்னர் நேற்றிரவு மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் உயிரிழந்துவிட்டார். அவரை தகனம் செய்வதற்கு இதில் கையெழுத்திடவும்" என்று டாக்டர் காகிதத்தை நீட்டும்முன் கதீஜா மயக்கமுற்று விழுந்தாள்.கணவன் நலீப் கற்சிலைப்போல் உறைந்து போனார்.


-----------------------------
~செய்னப் றிஸ்வி,
~புத்தளம்,
~ Rg.n:- 012