I.F. SHABRA - ADDALAICHENAI
ஜன்னலூடாக வீசிய தென்றல் காற்று தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கொஞ்சம் அசையச் செய்ய குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்ட ரிப்கா சிறிதும் தாமதிக்காது ஓடோடி வந்து தொட்டிலை மெதுவாக ஆட்டினாள்..
தாயின் ஒவ்வொரு தொடுகையையும் நன்றாகவே தெரிந்த குழந்தை இதழ்களைக்குவித்து இரு கைகளையும் காதுகளுக்கு தலையணையாக்கி உறங்கிப்போனது..
வழமையாக பல் வகையான உணவுப் பொருட்களால் அலங்கரிக்கப்படும் குளிர்சாதன பெட்டி தன் பசியைத்தீர்த்து ஏப்பம் விட ஏதுமின்றி மயங்கிக் கிடந்தது...
தன் சொந்த ஊரிலிருந்து கணவனின் வேலை நிமித்தமாக கொழும்புக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி விட வேண்டிய நிலை அவ்வாறே தொடர அந்த வீட்டையும் அவர்கள் விலைக்கு வாங்கி கொண்டனர்.
கணவன் முஆதின் மேற்படிப்புக்கான தளம் வெளிநாட்டிலேயே அமைந்துவிட ஒரு மாத காலத்தில் திரும்புவதாக வாக்களித்துவிட்டு சென்றவனை, தற்போது உலகையே தன் கைப்பிடிக்குள் சிறைப்பிடித்திருக்கும் கொரோனா வர விடாமல் செய்துவிட்டது..
புதிய ஊர்,புதிய வீடு என்ற நிலை மாறி அந்த வீடு பழக்கப்பட்டு விட்ட போதிலும் ரிப்காவிற்கு அடிப்படையிலேயே தெரியாதோருடன் பேசும் பழக்கம் சிறிதும் இல்லாதிருந்தது... தெரிந்தோருடனேயே நன்றாகப்பழகிய பின் தான் பேசும் அவளது செயல் அவளுக்கு சரியாகவே பட்டது..
அவளது எதிர் வீட்டு ஹாஷிமா ஆன்டிக்கு வயது நாற்பதை தாண்டியிருக்கும். ரிப்கா புதிய வீட்டுக்கு வந்ததிலிருந்தே அவளுடன் நெருங்கி பழக அவர் எப்போதும் நினைப்பதும் அதனை பெரும் பாவமாக எண்ணி இவள் தட்டிக்கழித்து வருவதும் பழைய பல்லவியாயிற்று.. இவ்வாறு அந்த பகுதி மக்களுக்கு அவளது கணவன் மீது ஏற்பட்ட பழக்கத்தினால் இவள் மீதும் அதே அன்பைக்காட்ட முற்படுவது ரிப்காவை வெறுப்பேற்றியது..
தனது பணம், தனக்கு தேவையான வாழ்க்கை என கணவன் குழந்தையுடன் சுருங்கிக் கொண்டவளின் மனநிலை எதிர் வீட்டுப் பெண்மணிக்கு தெரிந்து விட,
முஆதிடம்,
"என்ன முஆத்.. உங்க மனைவியும் உங்கள மாதிரி பேசுவாங்க என்று ஒரு வருஷமாக தான் காத்திருக்கோம்.. பேசுறாங்களே இல்லையே..."
என அவன் காதில் கூறிவிட,
"ஏன்மா எல்லாரோடையும் சகஜமாக பேசிப் பழகலாமே"
என்றவனிடம்,
"இங்க பாருங்க... எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.. தேவையான பணம் இருக்கு. நீங்க இருக்கீங்க. தேவைகள் எல்லாமே நேரத்துக்கு முன்னுக்கு நிறைவு செய்யப்படுது. இன்னும் எதுக்கு அடுத்தவங்க?"
கணவன் பேச்சை முடிக்கும் முன்னமேயே அவனது வாயை அடைத்தாள் ரிப்கா.
நினைவுகளை மீட்டியவளுக்கு கணவனின் அழைப்பு செவிகளையடைய,
"இன்னைக்கு என்ன சாப்பாடு மா?" என்றவனிடம்,
"ஒன்னும் இல்லங்க.. இங்க ஊரடங்கு போட்டு. அதனால ஒண்ணும் வாங்கிக் கொள்ள முடியல முந்தி மாதிரி... நினைச்சது போல தேவையானவைகள் வாங்க கஷ்டமாக இருக்கு.."
மறுமுனையில் இருந்த முஆதிற்கு ஒரே யோசனை. தனிமையில் தன் மனைவி என்ன செய்வாள்? அவள் தனக்கு தேவைப்படாது எனப் புறக்கணித்த உறவுகளின் தேவையை தற்போது அவளே நன்றாக உணர்ந்த போதும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் அவள் இருந்தாள்...
மூன்று நாட்களுக்கு முன்னர் தன் பந்து விழுந்ததாகக்கூறி அவளது கேட்டைத் தட்டிய ஹாஷிமா ஆன்ட்டியின் பேரனை விரட்டிய நினைவும் அவளுக்குள் வந்துபோக, அதே நேரம் அவளது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"இப்போ என்ன செய்ய போறிங்க ரிப்கா?"
"தெரியலையே.."
கணவனுடன் பேசியவாறே அவள் கதவைத் திறக்க, அங்கே ஹாஷிமா ஆன்டி கையில் பெரிய பையுடன் நின்றிருந்தாள்...
"இந்தாங்க ரிப்கா.. இதுகுள்ள வீட்டுக்கு தேவையான எல்லாம் இருக்கு.. எங்கட மகன் எங்களுக்கு தேவையான சாமான்கள் வாங்க கடைக்குப் போன.. அப்படியே உங்களுக்கும் தேவைப்படும் என்று வாங்கிட்டு வர சொன்னேன்.." என இழுக்க அவரது கூற்று சில்லென்று அவள் மனதைத் தாக்க,
"கொஞ்சம் இருங்க..
என கணவனிடம் கூறியவள்,
"என்னை மன்னிச்சிடுங்க ஆன்டி.. இதுவரை நான் உறவுகளே தேவையில்லை என நினைச்சிட்டு இருந்தேன்.. அத என்ட ஹஸ்பண்ட் எனக்கிட்ட சொல்லியும் நான் கேட்கல.. ஆனா எல்லாத்திலேயும் ஒரு நலவு இருக்கிர மாதிரி இந்த கொரோனாவும் எனக்கு ஒரு நன்மையைக் காட்டி தந்திட்டு.." கண்ணீர் மல்க கூறியவளைப் பார்த்து புன்னகைத்த ஹாஷிமா ஆன்ட்டி,
"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..பாவம் முஆத் லைன்ல இருக்கிற போல.. போய் பேசுமா."
என்றுவிட்டு சிரிப்புடன் விடைபெற, உறவுகளின்றி வாழ்க்கையில்லை.. என்னை எவ்வளவு தான் திட்டினாலும் என்னால் பலபேரின் வாழ்க்கையில் படிப்பினைகளும் உண்டு..
என்று கூறிவிட்டு கொரோனா செல்வது போன்ற விம்பம் அவள் கண்ணில் தோன்ற, கலங்கிய கண்களை துடைத்து விட்டு கணவனுடன் பேச்சை தொடர்ந்தாள் ரிப்கா...
முற்றும்....
ADDALAICHENAI
NAME :- IF. SHABRA
REGISTER NUMBER:- 015
0 Comments