Mohamed Anees Fathima Ilma
Weligama, Matara

கதிரவனின் பொற் கரங்கள் பூமித் தாயை அனல் கொண்டு முத்தமிட, அதற்கீடாய் குளிரினை உற்பத்தி செய்து வியர்வை முத்துக்களை காயச் செய்து கொண்டிருக்கிறது அந்த அறையின் மின்விசிறி.
அதற்குக் கீழ் துன்பத்தில் உருக்குலையும் நஜீபாவின் உள்ளமும் கதிரவனுக்கு சமமாய் எரிந்து கொண்டிருக்க அவள் விழிநீர் அதனை அணைக்கும் பணியில் பாலையில் பனித்துளியாய் கன்னத்தில் கோடு கிழித்துக் கொண்டிருந்தது.
அவளது நினைவலைகள் ஒருவருடத்துக்கு முன்னைய ஆறாக் காயங்கள் தந்த  தடங்களை தொட்டுக் கொண்டிருந்தன.

ஊரில் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் மரியாதையும் மிக்க அக்ரம் ஹாஜியாரின் அன்பு மனைவியே நஜீபா. இத்தம்பதிகளின் இரு கண்களாய் இம்மண்ணில் உதித்தவர்கள் தான் ஆதிலும் நஸ்மாவும். அன்பு, அரவணைப்போடு செல்வமும் அவர்கள் வாழ்வில் செழித்துக் காணப்பட்டது. உள்ளத்தில் கசடு இருப்பின் வேறு என்ன இருந்து பயன் தான் என்ன? கொடை கொடுப்பதில் அக்ரம் - நஜீபா தம்பதிகளுக்கிடையில் மலையும் மடுவும் போல் வேறுபாடு காணப்பட்டது. அக்ரம் ஹாஜியார் வாரி வழங்குவதில் வள்ளல் என்றால் நஜீபா அதற்கு எதிர்மாறாய்க் காணப்பட்டாள்.

அன்றொரு வெள்ளிக்கிழமை. வேளியிலிருந்து வந்த அக்ரம் ஹாஜியார், "நஜீபா.... நஜீபா.... இங்க கொஞ்சம் வாங்களேன்" என்று அழைப்பு விடுத்தார். "ஆ... என்னங்க.. என்ன விஷயம்...????"
"நஜீபா உங்களுக்கே நாட்டு நிலமய பத்தி நல்லா தெரியும். கொரோனாவால நெறய எளியவங்க கஷ்டப்படுறாங்க. எங்கட பக்கத்து றோட்ல ஈக்கிற அன்ஸார் நானாவும் இன்னும் பலரும் உண்ண, குடிக்க வழியில்லாம ஈக்கிறாங்க... பாவம் நல்ல மனிஷர் அவங்கெல்லாம்....." அவர் பேசி முடியும் முன்னரே "ஆ நீங்க என்ன செல்ல போறண்டு நல்லா விளங்குது. எல்லாத்தையும் மத்தவங்களுக்கு அள்ளிக் குடுத்துட்டு நாங்க நடு றோட்ல நிக்கவா...????" என்று கொக்கரித்தாள் நஜீமா.
நான் அப்பிடி செலால வரல்ல மா... நாங்க மத்தவங்களுக்கு உதவி செய்தா அல்லாஹ் எங்களுக்கு அத பன் மடங்கா தருவான்”
"போதும் ஒங்கட விளக்கம் தேவில்ல எங்கட வீட்டுல கல்யாண வயஸுல ஈக்கிற எங்கட மகள்கும் மகன்கும் செய்ய வேண்டிய வேலகள் நெறய இரிக்கி. அதால பேசாம போங்க பார்ப்பம்"
தன் மனைவிக்கு அடங்கியே பழகிய அக்ரம் ஹாஜியார் அத்துடன் வாய் திறக்காது பெட்டிப் பாம்பாய் ஒடுங்கினார். நஜீபாவின் கண்களில் மலையையே மறித்த திருப்தி.

காலச் சக்கரத்தின் பிடியில் இரு நாட்கள் காற்றாய் சுழன்றன. அன்று இடி, மின்னலுடன் மழை 'சோ'வெனப் பொழிந்து கொண்டிருந்தது. காற்றினைத் தாக்குப் பிடிக்க முடியாத மரங்கள் சுற்றிச் சுழன்று விழப் போகிறேன் என அச்சுறுத்திக் கொண்டிருந்தன. மழை நீர் நிலத்தினைக் குளமாக்கி நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. காலையில் நண்பர்களுடன் வெளியில் செல்வதாகக் கூறிச் சென்ற ஆதிலை மாலையாகியும் காணவில்லை. அவனது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டிருந்தது. மூவர் மனதிலும் இனம்புரியாத அச்சம் குடிகொண்டிருந்தது. இறைவனைத் துதித்த வண்ணம் அவன் வருகைக்காய் காத்திருந்தனர். 

"ரீங் ரீங்.... ரீங் ரீங்...." என்று சிணுங்கிய தொலைபேசியை கையிலெடுத்து 'ஹலோ...' என்றார் அக்ரம் ஹாஜியார். மறுமுனையில், "இது ஆதிலின் வீடு தானே. நான் ஹொஸ்பிடல்ல இருந்து பேசுறன். ஆதில்ட நெலம சீரியஸ்ஸா ஈக்கிது. உடனே வாங்க" என்றதும் மறுமுனையில் தொலைபேசி துண்டிக்கப்பட்டதோ இல்லையோ எதிர்பாராத அதிர்ச்சியினால் அக்ரம் ஹாஜியார் சரிந்து விழுந்தார். அவரின் நிலை கண்ட தாயும் மகளும் அவரை சுயநினைவுக்கு வரவழைத்து விபரத்தை அறிந்து கொண்டனர். நஜீபா வயிற்றிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுதாள். உடனடியாக வைத்தியசாலையை அடைந்த மூவராலும் அங்கு ஆதிலின் உயிரற்ற வெற்றுடலையே காண முடிந்தது.

அங்கே நின்றிருந்த அன்ஸார் நானா ஹாஜியாரின் கரங்களைப் பிடித்து, "ஹாஜி... ஒங்கட மகன் கூட்டாளிமாரோட ஆத்துல குளிக்கப் போய் வெள்ளத்துல அடிபட்டு எங்கட ஏரியா பக்கம் வந்திருக்கார். அத கண்ட நாங்க உடனே அவர கரக்கி கொண்டு வந்து ஹொஸ்பிடல்ல சேர்த்தம். டொக்டர்ஸும் அவர காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணினாங்க.  ஆனா அல்லாஹ்ட கழாகத்ருல எழுதீக்கிறத எங்களால மாத்தேலாவே ஹாஜி..." என்று விபரத்தைக் கூறி , ஆறுதல் வார்த்தைகளையும் கூறினார்.

அன்ஸார் நானா கூறியதைக் கேட்ட நஜீபா பனிக்கட்டியாய் உறைந்து போனாள். ஆதிலின் தந்தையும், சகோதரியும் விழிநீர் சுமக்க நஜீபாவோ அடியற்ற மரமானாள். இது அல்லாஹ் தன் செயலுக்கு தந்த தக்க தண்டனை என்பதைப் புரிந்து கொள்ள அவளுக்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை. “தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பது போல, அவரவர்க்கு துன்பம் வந்தால் தான் அதன் கஷ்டம் புரியும் என்ற ஞானம் அவள் உள்ளத்தில் உதித்தது. தன் குணத்தால் அன்பு மகனை இழந்ததை எண்ணி நொந்து போனாள்.  அச்சமயம் அவளது கஞ்சத்தனமான குணமும் பனி நீராய் உருகியது. 

"உம்மா... ஸதகா குடுக்க சாமானெல்லாம் வந்துட்டு. எல்லாத்தயும் பார்ஸல் போடனும்" என்ற மகள் நஸ்மாவின் குரல் நஜீபாவை கடந்த காலத்திலிருந்து  நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. தனது கெட்ட புத்தியை கட்டவிழ்த்து ஒரு பேரழிவினூடாக தனக்கு படிப்பினை தந்த அல்லாஹ்வைப் புகழ்ந்தவளாய்  ஸதகாப் பணியில் முழு மனதுடன் ஈடுபடலானாள்.

Mohamed Anees Fathima Ilma
Weligama, Matara
Register Number - 010