MFF. Fasra - Kandy
    ஆறடி உயரத்தில் நின்றிருந்த என்னை அடக்க அந்த ஆளுயரக் கண்ணாடி போதவில்லை.தலையல சற்றுக் குனிந்தவாறே அடங்கமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த சிகையை அழுந்தக் கோதிக்கொண்டு மாடியில் இருக்கும் என் அறையிலிருந்து கீழ் மாடியில் இருக்கும் என் உணவு மேசைக்கு வருகிறேன்.வரும் போது அங்கு மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் என் உருவத்தை பார்த்த எனக்கோ அலாதி பெருமை தான்.கிள்ளிவிட்டாலே இரத்தம் வரும் நிலையில் இருக்கும் எனக்கு என் நிறத்தையும் அழகையும் பற்றிய திமிரோ அகத்திலேயே அடைக்கலம் ஆகி இருந்தது சிறு வயது முதல்.கஷ்டம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாமல் வளர்ந்தவன் நான்.அதனாலோ என்னவோ தகுதியையும் நிறத்தையும் பார்த்தே பல பேருடன் பழகி வந்தேன்.பலரை அலட்சியப்படுத்தியதும் உண்டு.

இப்போது ஒரு நல்ல கம்பனியில் வேலை செய்கிறேன்.கை நிறைய சம்பளம்.விருப்பத்தில் தலையிடாத பெற்றோர்.சுருக்கமாக சொல்லப் போனால் சிறகடித்து பறக்கும் சிறு பறவை நான்.ஆனால்,அந்நாள் தான் என் வாழ்வின் திருப்பு முனையாக அமையும் என்பதை நான் ஒரு போதும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டேன்.

காலை உணவு உண்டு கொண்டிருந்த சமயம் 'ராகேஷ்' எனும் குரல் கேட்டது.ஆம்,அவனேதானா.என் நண்பன் மதன்.அவன் கூப்பிட்டதும் சாப்பிட்ட பாதி சாப்பிடாத பாதியாக கை கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன்.அங்கே என் தாய் உணவு கேட்டு விட்டு வந்த ஒருவருக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.அவரின் தோற்றமோ எனக்கு அறுவறுப்பை தந்தது.அறுவறுப்புடன் நான் அவரைப் பார்த்த பார்வை நிச்சயம் அவரை உயிரோடு கொன்றிருக்கும்.'பிளாக்கி'என்று வாயால் முணுமுணுத்துக் கொண்டு நான் முன்னே வர கண்கலங்கிப் போன அம்மனிதரின் முகம் என் கடைக்கண்ணில் வீழ்ந்தது.மெல்ல என் மோட்டார் சைக்கிளின் அருகில் செல்ல என் இதழ் அசைவை உணர்ந்த மதன் "எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்ட" என்று என் காதுக்கு கேட்கும் படி கூறினான்.அவனை சட்டை செய்யாது நானோ என் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர அவனும் ஏறி அமர்ந்தான்.வண்டியை கிளப்பினேன்.

அலுவலகம் செல்லும் வழியிலேயே இருந்தது அந்த குப்பை மேடு.குப்பைமேட்டின் உச்சிக்கு பக்கத்தில் ஏழைமக்களின் குடிசைகள்.கீழே எப்போது உடைப்பெடுக்கும் என்று எதிர்ப்பார்க்க கூடிய நிலையில் ஒரு குளம்.அவற்றிற்கு முன்னால் உள்ள பாதையே என் அலுவலகத்திற்கு செல்வதற்கான ஒரே வழி.அதைப்பார்த்தாலே எனக்கு குமட்டிக் கொண்டு வந்து விடும்.இப்போதும் அதையே நான் செய்ய என் முகம் போன போக்கை கண்ட மதனோ"எதுவுமே நிரந்தரமில்ல.நொடில எல்லாம் மாறிடும்" என்றான்.அதை அலட்சியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நானோ வேணுமென்றே காதைக் குடைந்தேன்.என் செயலில் அவன் முகம் இறுக்கத்தை பூசிக் கொள்ள அவன் வாய் மேலும் எதையும் பேசவில்லை.

ஊரில் தொடர்ந்து நான்கு நாட்களாக கன மழை பெய்து கொண்டிருந்தது.வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.வீட்டினர் வேண்டாம் என்று சொல்லியும் அலுவலகம் சென்ற பின்னரே நிலவரம் புரிந்தது.மாலை நான்கு மணியளவில் அலுவலகம் மூடப்பட்டு வீட்டிற்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டது.நினும் மதனும் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தோம்.குளத்தின் அருகே வண்டியை சடாரென நிறுத்தினான் மதன்.குலுங்கலில் அதிர்ந்த நான் சுதாகரித்துக் கொண்டு முன்னால் அங்கு பாதை  இருந்த இடத்தில் பாரிய பள்ளமொன்றே இருந்தது.வெள்ள நீரோ ஆறு போல் ஓடிக் கொண்டிருந்தது.எங்களைப் போன்ற பலர் அக்கரைக்கு செல்ல முடியாமல் நின்றிருந்தனர்.சிறிது நேரத்தின் பின்  மீட்சி நடவடிக்கைக்காக படகு ஒன்று அங்கே வந்தது.மற்றவர்கள்  ஏறிக்கொள்ள என்னை ஏறச்சொல்லி நீட்டிய கையை கண்டதும் என் கை தானாக பின் வாங்கியது.அந்நேரத்திலும் உயிரை விட எனக்கு நிறமே மேலாக இருந்தது.

மதன் என்னை நோக்கி வீசிய பார்வையில் அப்பட்டமான வலி தெரிந்தது.படகில் இருவரும் ஏறவில்லை.என் மனம் முதன் முதலாக மாற்றத்தை உணரத் தொடங்கியது.தெளியவில்லை அம்மனநிலையில் இருந்து.பாரிய அரவமொன்று கேட்க குளமோ உடைப்பெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.முதன் முதலாக உயிர் பயம் தொற்றியது என்னை.மதனின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன்.அவனோ என் மனதை உணர்ந்தவனாய் இருக்க அன்று குமட்டிக் கொண்டு வந்த குப்பை மேட்டிற்கே இன்று குடியைக் காப்பாற்றிக் கொள்ள ஏறினேன்.எதை அலட்சியப் படுத்துகிறோமோ அதையே நிர்ப்பந்தமாக்கி நிராகரிக்க முடியாமல் செய்து விடுகிறது வாழ்க்கை.ஒருவாறு குப்பை மேட்டின் உச்சியை அடைந்து விட்டோம்.மழைத்துளி வேறு மீண்டும் மீண்டும் அழுத்தமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தது.கார் மேகம் கலைந்திருந்ததால் இருட்டியிருந்த வானம் கதிரவனின் கண்ணாமூச்சி ஆட்டத்தால் மேலும் இருளை பூசிக் கொண்டது.

சிறிது நேரத்தின் பின் பெரியவர் ஒருவர் குடையுடன் எம் அருகில் வந்தார்.அன்று உணவு கேட்டு வந்திருந்தவரே தான்.நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.வருமாறு அழைத்தார் தன்னோடு.நானோ மதனின் கை மணிக்கட்டை இறுகப்பற்றி மறுப்பாக தை அசைத்தேன்.அவனின் பார்வை பறைசாற்றியது அவன் கோபத்தை.அவனுடன் நகர்ந்தேன்.பசியின் உச்சத்தில் கிடைத்த பழைய சோறும் பஞ்சாமிர்தம் போல் இருந்தது.எதையும் காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் நடந்து கொண்ட பெரியவரின் செயல் என் ஆணவத்தை வாள் கொண்டு அறுத்தது எனினும் முழுதாக அல்ல.அங்கே அவர் தங்கிக் கொள்ளச் சொன்னாலும் என் குற்றவுணர்வோடு சேர்த்து ஆணவமும் அதற்கு தலை சாய்க்கவில்லை.வெளியே வந்து குப்பை மேட்டின் ஒரு ஓரத்தில் பாதி காணாமல் போயிருந்த அந்தக் குடிசையில் அமர்ந்து கொண்டோம்.மதனோ என் மடியில் கண்ணயர எனக்கோ விழிநீர் துளிர்த்தது.முழுதாக என் தவறை அப்போது உணர்ந்து கொண்டேன் தனிமையில்.ஆம்,கறுப்பு என்று பேனா மையை ஒதுக்கி விட்ட வெள்ளைக் காகிதம் தனியாக கண்ணீர் வடித்தது குப்பைத் தொட்டிக்குள்."படித்து முடித்தவன் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்."இந்த வாழ்க்கைல எதுவும் நிரந்தரமில்ல.அனர்த்தங்கள் உயிர காவு கொள்ளும் போது நாம கறுப்பா சிவப்பான்னு பாக்குறதில்ல.ஆணவம் நிச்சயம் அழிவுக்கு தான்.நம்ம நிலம எப்படி எப்போ மாறும்னு சொல்ல முடியாது.அவமானப்படுத்தின இடத்திலேயை அடைக்கலம் கேட்க வேண்டிய நிலைய வாழக்கை கொடுத்துரும்.இப்படி,எல்லாவற்ற பத்தியும் உணர்ந்து கொண்டேன் அந்த ஒரே ஒரு நாள்ல" என்றான் ராகேஷ்."அன்னிக்கு பல பேரோட இறப்ப பார்த்ததும் தான் நிதர்சனம் புரிஞ்சிது" என்றான் சற்று வருத்தம் தோய்ந்த குரலில்." படகுல ஏர்ரத நிறம் தடுத்திச்சு.பெரியவர் வீட்டில தங்குறத ஆணவம் தடுத்திச்சு.வெளியே வந்து தங்கும் போது தான் முழுசா உணர்ந்தேன் என்னோட தவற. ஆனா அதுக்கு காலம் கை கொடுக்கல்ல. அந்த அனர்த்தம் என்னோட வாழ்க்கை பாதிச்சிருந்தாலும் என்னோட மாற்றத்துக்கான மூலக்காரணம் அது தான்.அன்னிக்கி தங்கியிருக்கும் போது மின்னல் தாக்கிரிச்சி.அதோட விளைவு தான் இது"என்றவன் தன் அறைக்கு செல்ல அவனையே வெறித்து பார்த்த வண்ணம் இருந்தான் வாசு.

அழகிலும் நிறத்திலும் தகுதியிலும் தங்கி அதை வைத்தே பிறரை மதிப்பவன் தன் தவறை உணர்நதான்.மீண்டும் மீண்டும் அவன் கண் முன் ஒற்றைக் காலை வைத்துக் கொண்டு பாடுபடும் தன் தந்தையின் முகமே தோன்றி மறைந்தது.
MFF Fasra
Kandy
Register no 014